ஊராட்சி தலைவரை தாக்கி கொலை மிரட்டல்
கிணத்துக்கடவு அருகே ஊராட்சி தலைவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த பா.ஜனதா நிர்வாகி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே ஊராட்சி தலைவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த பா.ஜனதா நிர்வாகி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஊராட்சி தலைவர்
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஒன்றியம் நெம்பர் 10 முத்தூர் ஊராட்சி தலைவர் சதீஷ்குமார்(வயது 37). தி.மு.க.வை சேர்ந்தவர். இவரை நேற்று முன்தினம் இரவில் தொடர்பு கொண்ட அதே ஊரை சேர்ந்த கார்த்தி என்பவர் இ.எம்.எஸ். தோட்டத்துக்கு அருகில் அனுமதியின்றி சிலர் மணல் அள்ளுவதாக கூறினார். உடனே அங்கு சென்ற சதீஷ்குமார், மணல் அள்ளிக்கொண்டு இருந்தவர்களை கண்டித்தார். அப்போது ஆத்திரம் அடைந்த அவர்கள், சதீஷ்குமாரை தேங்காய் உரிக்கும் ஊசி மற்றும் கைகளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
போலீசில் புகார்
இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். பின்னர் சதீஷ்குமாரை தாக்கியதாக பொட்டையாண்டிபுறம்பை சேர்ந்த காளிமுத்து(38), நெம்பர் 10 முத்தூரை சேர்ந்த கோவை தெற்கு மாவட்ட பா.ஜனதா விவசாய அணி செயலாளர் கைலாஷ்(48), மூலக்கடையை சேர்ந்த மயில்மாணிக்கம்(60) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் மேலும் 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
முற்றுகை
இதற்கிடையில் ஊராட்சி தலைவரை தாக்கிய அனைவரையும் கைது செய்யக்கோரி தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.