வாலாஜாபாத் அருகே ஊராட்சி மன்ற தலைவியின் கணவருக்கு அரிவாள் வெட்டு
வாலாஜாபாத் அருகே ஊராட்சி மன்ற தலைவியின் கணவருக்கு அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச்சென்று விட்டனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட களியனூர் கிராமத்தை சேர்ந்தவர் வடிவுக்கரசி (வயது 42). ஊராட்சி மன்ற தலைவி. இவரது கணவர் ஆறுமுகம் (வயது 48). டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். வடிவுக்கரசியும், ஆறுமுகமும், உடல்நிலை சரியில்லாததையடுத்து காஞ்சீபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று கொண்டு களியனூரில் உள்ள வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். கணவன், மனைவி இருவரும் தங்களின் வீட்டின் அருகே வந்தபோது மறைந்திருந்து முககவசம் அணிந்திருந்த மர்ம நபர்கள் சிலர் ஆறுமுகத்தை வழிமறித்து அரிவாளால் கழுத்து, தலை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டி விட்டு தப்பிச்சென்று விட்டனர். வடிவுக்கரசி சத்தம் போடவே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து ஆறுமுகத்தை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் ஆறுமுகம் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து வாலாஜாபாத் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த காஞ்சீபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜூலியஸ் சீசர் தலைமையில் வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல், விஷ்ணு காஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ், காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பேசில் பிரேம் ஆனந்த் மற்றும் போலீசார் களியனூர் விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதற்கு முன்விரோதம் காரணமா? தேர்தல் தகராறு காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.