பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் வெட்டிக்கொலை
நெல்லை அருகே பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை அருகே பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வார்டு உறுப்பினர்
நெல்லை அருகே கீழநத்தம் வடக்கூரை சேர்ந்தவர் நாராயணசாமி. தொழிலாளி. இவருக்கு 3 மகன்கள். மூத்த மகன் ராஜாமணி (வயது 30). இவருடைய மனைவி சண்முகவடிவு. கீழநத்தம் பஞ்சாயத்து 2-வது வார்டு உறுப்பினரான ராஜாமணி, அந்த பகுதியில் பலசரக்கு கடையும் நடத்தி வந்தார்.
நேற்று மதியம் 3.45 மணிக்கு ராஜாமணி கீழநத்தம் பகுதியில் அமைந்துள்ள பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் புறக்காவல் நிலையம் அருகே மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை அழைத்து வர சென்றார்.
வெட்டிக்கொலை
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் ராஜாமணியை திடீரென வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். பின்னர் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் ராஜாமணியை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி ராஜாமணி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
சாலை மறியல்
ராஜாமணி கொலை செய்யப்பட்டதை அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரி முன்பு உள்ள சாலையில் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் உதவி போலீஸ் கமிஷனர்கள் சதீஷ்குமார், பிரதீப், இன்ஸ்பெக்டர்கள் காசிப்பாண்டியன், ஹரிஹரன் ஆகியோர் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் அதனை ஏற்க மறுத்து போராட்டத்தை தொடர்ந்தனர்.
2 பேரிடம் விசாரணை
இந்த கொலை தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவின் பேரில் போலீசார் 2 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜாமணிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் திருமணம் ஆனது குறிப்பிடத்தக்கது.