லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
நாமக்கல்லில் பட்டறை அருகே நிறுத்தி இருந்த லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
லாரியில் தீ விபத்து
நாமக்கல்லை சேர்ந்தவர் பிரேம்குமார். லாரி உரிமையாளர். இவருக்கு சொந்தமான லாரியை சேலம் ரோட்டில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றின் பின்புறம் இருந்த காலி நிலத்தில் நிறுத்தி இருந்தார். இந்த லாரி நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணி அளவில் திடீரென தீப்பற்றி எரிந்தது.
இதுகுறித்து அருகில் உள்ள பட்டறையில் வேலை செய்து கொண்டு இருந்த தொழிலாளர்கள் நாமக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் (போக்குவரத்து) சரவணன் தலைமையில் அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
பரபரப்பு
இருப்பினும் லாரியின் முன்பகுதி முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. சேத மதிப்பு குறித்து நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில் லாரிக்கு அடியில் கிடந்த குப்பையில் பற்றிய தீ, லாரிக்கு பரவி இருப்பது தெரியவந்து உள்ளது. தீ விபத்துக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்கிற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் நள்ளிரவில் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.