கபாலீசுவரர் கோவிலில் பங்குனி திருவிழா: மயிலாப்பூரில் 63 நாயன்மார்கள் திருவீதி உலா கோலாகலம்


கபாலீசுவரர் கோவிலில் பங்குனி திருவிழா: மயிலாப்பூரில் 63 நாயன்மார்கள் திருவீதி உலா கோலாகலம்
x

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் நேற்று நடந்த 63 நாயன்மார்கள் திருவீதி உலா நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சென்னை

தமிழகத்தில் ஆதிகாலத்தில் இருந்து இன்று வரை எத்தனையோ சிவனடியார்கள் தோன்றி இருந்தாலும்கி.பி.400-ம் ஆண்டு முதல் ஆயிரம் ஆண்டு வரை வாழ்ந்த சிவனடியார்களில் 63 பேர் 'நாயன்மார்கள்' என்று போற்றப்படுகின்றனர். இவர்களில் 'சைவ சமயக்குரவர்கள்' என்று அழைக்கப்படும் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் சிவபெருமானுக்கு சேவை செய்ததால் இவர்களையே சிவபெருமானின் பிரதிபலிப்பாக கருதி பக்தர்கள் பூஜை செய்து வருகின்றனர்.

அந்தவகையில், சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பங்குனி திருவிழாவின் ஒரு பகுதியாக 63 நாயன்மார்கள் திருவீதி உலா நிகழ்ச்சி நடப்பது வழக்கம்.

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகு விமரிசையாக நடந்துவருகிறது. இந்த ஆண்டு பங்குனி திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அதைத்தொடர்ந்து 'அறுபத்து மூவர் திருவிழா' என்று அழைக்கப்படும் 63 நாயன்மார்கள் திருவீதி உலா நிகழ்ச்சி நேற்று பிற்பகல் 2.45 மணியளவில் நடந்தது.

ஒரு பல்லக்கில் 4 நாயன்மார்கள் என்ற கணக்கில் 63 நாயன்மார்கள் சிலைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பல்லக்கில் ஏற்றப்பட்டு கோவில் இருந்து கோபுர வாசலில் உள்ள 16 கால் மண்டபத்துக்கு கொண்டுவரப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, திருவீதியுலா மேள தாளம் முழங்க, மங்கல இசை ஒலிக்க, வேத மந்திரங்கள் ஓத ஆரவாரத்தோடு புறப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட வெள்ளி சப்பரத்தில் வந்த கபாலீசுவரர் 63 நாயன்மார்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் சிலர், திருக்கயிலாய வாத்தியம் இசைத்தும், சிவ நடனமாடியும் சாமியை வரவேற்றனர். அப்போது கூடியிருந்த பக்தர்கள் 'ஓம் நமச்சிவாய, ஓம் நமச்சிவாய...' என பக்தி கோஷமிட்டனர்.

மாடவீதிகளில் திருவீதி உலா நிகழ்ச்சியில் விநாயகர் மற்றும் மயிலாப்பூரின் கிராம தேவதையான கோலவிழி அம்மன் ஆகியோர் முன்னே சப்பரத்தில் செல்ல, வெள்ளி சப்பரத்தில் கற்பகாம்பாள் உடனுறை கபாலீசுவரர், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர், முண்டகக்கண்ணியம்மன், அங்காள பரமேஸ்வரி, பெரியநாயகி சமேத வாலீசுவரர், வீரபத்திர சுவாமிகள், திருவள்ளுவர்-வாசுகி ஆகியோர் கிழக்கு மாடவீதி, தெற்கு மாடவீதி, ஆர்.கே.மடம் சாலை, வடக்குமாட வீதி வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தனர்.

63 நாயன்மார்கள் தனித்தனி சப்பரத்தில் மாட வீதிகளில் வலம் வரும் கண்கொள்ளா காட்சியை காண காலையில் இருந்தே சென்னை மாநகர் மட்டுமின்றி புறநகர் பகுதியையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மயிலாப்பூரில் குவிந்தனர்.

விழாவை முன்னிட்டு மயிலாப்பூரில் உள்ள சைவ சித்தாந்த மன்ற தலைவர் பேராசிரியர் நல்லூர்சா.சரவணன் தலைமையில் மன்ற உறுப்பினர்கள் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

இதேபோன்று பெண்கள் பலர் கோவிலைச் சுற்றி உள்ள மாடவீதிகளில் மண்பானையில் சர்க்கரைப் பொங்கல் வைத்து சாமிக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு வழங்கினர். இவ்வாறு செய்வதன் மூலம் தீராத நோய்களும் குணமடையும் என்பது நம்பிக்கையாகும்.

மயிலாப்பூரில் வசிப்பவர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர், தொழிற்சங்கத்தினர், அரசியல் கட்சியினர் போன்றோர் சிறப்பு பந்தல் அமைத்து அன்னதானம், நீர்மோர், இனிப்புகள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு எழுதுபொருட்கள் வழங்கினர். முன்னதாக நேற்று காலையில் திருஞானசம்பந்தர் சுவாமிகள் எழுந்தருளல் நிகழ்ச்சியும், பிற்பகலில் 'அங்கம் பூம்பாவையாக்கி அருளுதல்' நிகழ்ச்சியும் நடந்தது.

அறுபத்து மூவர் திருவிழாவையொட்டி மயிலாப்பூர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கோவிலைச் சுற்றி மாட வீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டனர். பெண்களின் நகைகளை பாதுகாப்பதற்காக ஊக்குகளை போலீசார் இலவசமாக பெண்களுக்கு அளித்தனர். மேலும் ஒலிபெருக்கிகள் மூலம் பொதுமக்களுக்கு அவ்வப்போது அறிவுரை வழங்கினர். ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயார்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. விழா ஏற்பாடுகளை கபாலீசுவரர் கோவில் இணை கமிஷனர் இரா.ஹரிஹரன் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.


Next Story