கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா தொடங்கியது


பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. அக்னிக்காவடி இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது.

புதுக்கோட்டை

முத்துமாரியம்மன் கோவில்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூரில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது.

இதையொட்டி பொன்னமராவதி, ஆலவயல், கொன்னைப்பட்டி, செவலூர், செம்பூதி, காட்டுப்பட்டி, வேகுப்பட்டி, தூத்தூர், கண்டியாநத்தம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் பால்குடம், பூத்தட்டு, முளைப்பாரியை முக்கிய வீதிகள் வழியாக எடுத்து சென்று அம்மனுக்கு சாத்தி வழிபட்டனர்.

சிறப்பு பஸ்கள் இயக்கம்

விழாவையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் புதுக்கோட்டை, திருமயம், திருப்பத்தூர், பொன்னமராவதி உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழாவில் ஆங்காங்கே தண்ணீர்பந்தல் அமைக்கப்பட்டு நீர் மோர், பானகம், தண்ணீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு மக்களின் தாகம் தணிக்கப்பட்டது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி போலீஸ் துணை சூப்பிரண்டு அப்துல் ரகுமான் தலைமையிலான போலீசார் செய்திருந்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான அக்னிக்காவடி விழா இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.


Next Story