காலை உணவை சாப்பிட விடாமல் மாணவர்களை தடுத்த பெற்றோர்களால் பரபரப்பு -அமைச்சர் நேரில் ஆய்வு
பள்ளிக்கூடத்தில் பட்டியலின பெண் சமைத்த காலை உணவை சாப்பிட விடாமல் மாணவர்களை தடுத்த பெற்றோர்களால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அமைச்சர் கீதாஜீவன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
தூத்துக்குடி,
தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. மாணவ-மாணவிகளின் பசியை போக்கி, கல்வி புகட்டும் இந்த உன்னத திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. அங்கு பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒரு பெண் காலை உணவு சமைத்து வழங்குகிறார். இந்த நிலையில் அங்கு பயிலும் 11 மாணவ-மாணவிகளில் பெரும்பாலான குழந்தைகளை காலை உணவு சாப்பிட வேண்டாம் என்று பெற்றோர்கள் தடுத்ததாக கூறப்படுகிறது.
சாப்பிடாமல் தவித்தகுழந்தைகள்
இதுகுறித்து தகவல் அறிந்ததும், கோவில்பட்டி உதவி கலெக்டர் ஜேன் கிறிஸ்டிபாய், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர் முகம்மது மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நேற்று உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் காலை உணவு வழங்கி அன்புடன் சாப்பிடுமாறு அறிவுறுத்தினர்.
இதற்கு மாணவ-மாணவிகளின் பெற்றோர்களில் பெரும்பாலானவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சாப்பிட அமர்ந்த மாணவ-மாணவிகள் கண்ணீர்மல்க சாப்பிட முடியாமல் தவித்தனர். 2 குழந்தைகள் மட்டுமே உணவு சாப்பிட்டனர்.
அமைச்சர் கீதாஜீவன்
இதனை அறிந்த சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் உசிலம்பட்டி பள்ளிக்கூடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். காலை உணவையும் சாப்பிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து தலைமை ஆசிரியர், காலை உணவு திட்ட சமையலர், மாணவ-மாணவிகள் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரித்தனர்.
பின்னர் அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், ''உசிலம்பட்டியில் உள்ள சிலருக்கும், காலை உணவு திட்ட சமையலருக்கும் இடையே தனிப்பட்ட பிரச்சினை காரணமாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை காலை உணவு சாப்பிட அனுமதிக்க மறுத்து வருகின்றனர்.
இதுகுறித்து குழந்தைகளுக்கு எதுவும் தெரியவில்லை. இந்த பிரச்சினை விரைவில் சரி செய்யப்படும்'' என்றார்.