சிறுமுகை அருகே பயங்கரம்: மதுக்கடை பார் ஊழியர் வெட்டிக்கொலை-முன்விரோதம் காரணமா? போலீசார் விசாரணை
சிறுமுகை அருகே மதுக்கடை பார் ஊழியர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை முன்விரோதம் காரணமாக நடந்ததா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேட்டுப்பாளையம்,
சிறுமுகை அருகே மதுக்கடை பார் ஊழியர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை முன்விரோதம் காரணமாக நடந்்ததா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பார் ஊழியருக்கு சரமாரி வெட்டு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகையை அடுத்த வெள்ளிக்குப்பம்பாளையத்தில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. அதன் அருகே உள்ள பாரில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் கண்டணப் பட்டியைச் சேர்ந்த காளையப்பன் (வயது 27) என்பவர் ஊழியராக கடந்த 3 மாதமாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் பாரின் உள் அறையில் 2 ஊழியர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். அறைக்கு வெளியே காளையப்பன் சமையல் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த அடையாளம் தெரியாத சில மர்ம ஆசாமிகள் காளையப்பனை அரிவாளால் சரமாரியாக வெட்டி வெட்டிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்று விட்டனர்.
சம்பவ இடத்திலேயே பலி
இதில் படுகாயம் அடைந்த காளையப்பன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு சக ஊழியர்கள் வெளியே வந்து பார்த்த போது காளையப்பன் பிணமாக கிடந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், மேட்டுப்பாளையம், சிறுமுகை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், துணை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி, சிறுமுகை போலீஸ் இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதய ரேகா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தகுமார், காசிபாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
பின்னர் காளையப்பன் உடலை கைப்பற்றி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலையில் துப்பு துலக்க கோவையில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கொலை நடந்த இடத்தில் பதிவான ரேகைளை பதிவு செய்தனர்.
தனிப்படை அமைப்பு
இதேபோல் கோவையில் இருந்து மோப்ப நாய் வரழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்தபடி அங்குள்ள பெட்ேரால் பங்க் வரை ஓடி நின்றுவிட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
இது தொடர்பாக நேற்று மாலையில் கொலை கும்பலை சேர்ந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் இறந்தவரின் நெருங்கிய உறவினர் என்பதும், காளையப்பன் திருப்பூரில் உள்ள டாஸ்மாக் பாரில் வேலை பார்த்த போது, கொலை கும்பலுடன் முன்விரோதம் ஏற்பட்டது தெரியவந்தது. இதனால் அவர் அங்கு வேலையை விட்டுவிட்டு சிறுமுகைக்கு வந்த நிலையில் அந்த கும்பல் வெட்டிக் கொன்றது தெரிய வந்தது.