கரடிவாவியில் சிறுத்தை நடமாட்டமா?
கரடிவாவியில் சிறுத்தை நடமாட்டமா?
பல்லடம்,
பல்லடம் அருகே கரடிவாவி அரசு மருத்துவ மனை கதவின் கண்ணாடி உடைந்து இருந்ததாலும், அங்கு மர்ம விலங்கின் காலடி தடம் பதிவாகி இருப்பதாலும், அது சிறுத்தையாக இருக்குமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது.
அரசு ஆஸ்பத்திரி
பல்லடம் அருகே கரடிவாவியில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு நேற்று செவிலியர்கள் சென்றனர். அபபோது ஆஸ்பத்திரி முன்புற கதவின் கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் வந்து பார்த்தபோது கதவின் கண்ணாடிகள் மட்டும் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் கதவுகளில் கீரல்கள் ஏற்பட்டிருந்தது.
பின்னர் அறையில் சென்று பார்த்தபோது மேசை மீது இருந்த கணினியின் வயர்கள் சேதமாக்கப்பட்டு, கணினிகள் கீழே தள்ளப்பட்டு கிடந்தது. இதையடுத்து போலீசார் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ஏதோ ஒரு மர்ம விலங்கின் காலடித்தடம் உள்ளதாக தெரிவித்தனர்.
சிறுத்தையா?
இதையடுத்து காமநாயக்கன்பாளையம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரடிவாவியில் சிறுத்தை உலாவுவதாக தகவல்கள் வந்தது. இதனால் அந்த மர்ம விலங்கு சிறுத்தையாக இருக்குமோ? என பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.