பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
x
திருப்பூர்


திருமூர்த்திமலை பகுதியில் பலத்த மழைபெய்ததால் பஞ்சலிங்க அருவியில் அதிக தண்ணீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

திடீர் மழை

உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.

கோவிலின் அடிவாரத்தில் இருந்து சுமார் 950 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்க அருவி உள்ளது. அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் ஓடைகள் நீர்வரத்தை அளித்து வருகிறது.

கடந்த சில மாதங்களாக நிலவிய வெப்பத்தின் தாக்குதல் காரணமாக அருவியில் நீர்வரத்து முற்றிலுமாக குறைந்து விட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்து வந்தனர். இந்த சூழலில் நேற்று முன் தினம் மாலை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் திடீரென பலத்த மழை பெய்தது.

அருவியில் தண்ணீர் அதிகம்

இதன் காரணமாக பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியவாறு அடிவாரப் பகுதியில் உள்ள மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள கோவிலை சூழ்ந்து திருமூர்த்தி அணையை அடைந்தது. திருமூர்த்திமலை கோவிலை வெள்ளம் சூழ்ந்தவாறு செல்லும் வீடியோ புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. அதைத் தொடர்ந்து நேற்று காலை அருவியில் குளித்து மகிழ்வதற்காக சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வந்தனர்.

குளிக்க தடை

ஆனால் அருவியில் தண்ணீரின் சீற்றம் அதிகமாக இருந்ததால் அதில் குளிப்பதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

அதைத் தொடர்ந்து கோவில் முன்பு உள்ள பாலாற்றில் குளித்துவிட்டு மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிச் சென்றனர். அருவிக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை கோவில் பணியாளர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.


Next Story