பரம்பிக்குளம் அணை 71 அடியை எட்டியது

பரம்பிக்குளம் அணை 71 அடியை எட்டியதை தொடர்ந்து பாதுகாப்பு கருதி மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கேரள மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி
பரம்பிக்குளம் அணை 71 அடியை எட்டியதை தொடர்ந்து பாதுகாப்பு கருதி மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கேரள மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உபரிநீர் வெளியேற்றம்
பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணை 72 அடி கொள்ளளவு கொண்டது. அணைக்கு சோலையார் அணையில் இருந்து மின் உற்பத்தி நிலையம்-1, சேடல் பாதை வழியாகவும் தண்ணீர் வருகிறது. இதைதவிர நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மூலம் அணைக்கு நீர்வரத்து உள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு அணை முழுகொள்ளளவை எட்டியது. அதன்பிறகு போதிய மழை பெய்யாததால் அணையின் நீர்மட்டம் குறைந்தது.
இந்த நிலையில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இந்த நிலையில் நேற்று அணை 71 அடியை எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஆற்றின் கரையோரம் வசிக்கும் கேரள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
நீர்வரத்து கண்காணிப்பு
சோலையார் அணையில் மின் உற்பத்தி நிலையம் 1-யில் மின் உற்பத்தி செய்யப்பட்டு பரம்பிக்குளம் அணைக்கு வினாடிக்கு 445 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. மேலும் சேடல் பாதை வழியாக வினாடிக்கு 2000 கனஅடி மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மூலம் அணைக்கு வினாடிக்கு 300 கன அடி நீர்வரத்து உள்ளது. 72 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 71 அடியை எட்டியது.
அணையின் பாதுகாப்பு கருதி மதகுகள் வழியாக வினாடிக்கு 700 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் இருந்து சுரங்கபாதை வழியாக தூணக்கடவிற்கு வினாடிக்கு 500 கன அடி திறக்கப்பட்டு உள்ளது. பரம்பிக்குளம் அணையில் இருந்து உபரி நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளதால் கேரளாவுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. அணையில் 17 ஆயிரத்து 820 மில்லியன் கன அடி நீரை சேமித்து வைக்கலாம். தற்போது 17 ஆயிரத்து 590 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீர்வரத்தை கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
மழை அளவு
பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர நிலவரப்படி பதிவான மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
சோலையார் 22, பரம்பிக்குளம் 11, ஆழியாறு 9, வால்பாறை 27, மேல்நீராறு 48.6, கீழ்நீராறு 29, காடம்பாறை 7, சர்க்கார்பதி 3, மணக்கடவு 7, தூணக்கடவு 14, பெருவாரிபள்ளம் 18, அப்பர் ஆழியாறு 11, நவமலை 7, பொள்ளாச்சி 4.4 என பதிவானது.






