பரந்தூர் விமான நிலையம்: விவசாயிகள் கிளர்ந்தெழுந்தால் இந்த அரசு தாங்காது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி


பரந்தூர் விமான நிலையம்: விவசாயிகள் கிளர்ந்தெழுந்தால் இந்த அரசு தாங்காது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
x

விவசாயிகள் கிளர்ந்தெழுந்தால் இந்த அரசு தாங்காது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

சென்னையில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. எங்கு பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. இந்த பிரச்சினைகளை சரி செய்ய வேண்டும். குண்டும், குழியுமான சாலைகளை மூட வேண்டும். ஜெயலலிதா விலையில்லா மிதி வண்டி, விலையில்லா மடி கணினி, தாலிக்குத் தங்கம் போன்ற பல்வேறு சமூக திட்டங்களைக் கொண்டு வந்தார்.

இந்த அரசு தாலிக்குத் தங்கம் திட்டத்தை நிறுத்தி விட்டது. இன்றைக்கு சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. எட்டுவழிச் சாலை திட்டம் நல்ல திட்டம். அப்போது இவர்கள் எட்டுவழி சாலையை அனுமதிக்க மாட்டோம் என்று தடுத்து நிறுத்தி விட்டு தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் பல்டி அடிக்கிறார்கள்.

பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் வீடு தருகிறோம். பணம் தருகிறோம் என்று 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை அழித்து, விவசாயத்தை ஒழித்து, அதன் மீது விமான நிலையம் அமைக்க வேண்டுமா? இதன் காரணமாகத்தான் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அரசு விவசாயிகளின் மனநிலை அறிந்து செயல்பட வேண்டும். விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். விவசாயிகள் கிளர்ந்தெழுந்தால் இந்த அரசு தாங்காது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story