அரசு விரைவு பஸ்களில் பார்சல் சேவை கட்டண விவரம் வெளியீடு


அரசு விரைவு பஸ்களில் பார்சல் சேவை கட்டண விவரம் வெளியீடு
x

அரசு விரைவு பஸ்களில் நெல்லை அல்வா, நாகர்கோவில் நேந்திரம் பழம் சிப்ஸ் போன்ற அந்தந்த ஊர்களில் உள்ள பொருட்களை வெளியூர்களுக்கு அனுப்பும் திட்டம் வருகிற 3-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

விரைவு பஸ்களில் பார்சல் சேவை

தமிழகம் முழுவதும் குறைந்த இடைவெளியில், குறுகிய நேரத்தில் அரசு விரைவு பஸ்களை விரைவு போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது. தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பகுதியிலும் விளைவிக்கப்படும் உணவு பொருட்கள் மற்றும் உற்பத்தி செய்யப்படும் பிரபலமான பொருட்களை பிற பகுதிகளில் வியாபாரம் செய்வதற்கு ஏதுவாக தற்போது லாரி மற்றும் பார்சல் சேவைகளின் மூலம் எடுத்து செல்லப்படுகிறது.

குறைந்த அளவிலான பொருள்களை லாரி வாடகைக்கு இணையாக குறைந்த நேரத்தில் விரைவில் அனுப்புவதற்கு ஏதுவாக பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் நாள்தோறும் அனுப்ப வேண்டிய பொருள்களை 2 ஊர்களுக்கு இடையே அனுப்பும் வகையில் பார்சல் சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது.

நாகர்கோவில் நேந்திரம் பழம் சிப்ஸ்

இந்த சேவை வருகிற ஆகஸ்டு 3-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஒரு மாதம் முழுவதும் பஸ்களில் உள்ள சரக்கு வைக்கப்படும் பெட்டிகளை மாத வாடகை அல்லது தினசரி வாடகை செலுத்தி உபயோகித்து கொள்ளலாம்.

சரக்கு பெட்டிகளில் புகழ்பெற்ற நெல்லை அல்வா, ஊத்துக்குளி வெண்ணை, தூத்துக்குடி மக்ரூன், கோவில்பட்டி கடலை மிட்டாய், திண்டுக்கல் சிறு வாழை, நாகர்கோவில் நேந்திரம் பழம் சிப்ஸ் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு பிரபலமான பொருட்களை அனைத்தையும் இதன் மூலம் எளிதாக அனுப்பலாம். சிறு, பெரு வியாபாரிகள், வணிகர்கள், முகவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்துவதற்கு அருகில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக கிளை மேலாளரிடம் விண்ணப்பித்து பயனடையலாம்.

கட்டண விவரம்

பிற ஊர்களிலில் இருந்து சென்னைக்கு 80 கிலோ எடை கொண்ட பொருட்களை அனுப்புவதற்கு தினசரி மற்றும் மாத கட்டணம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்தவகையில் திருச்சி (331 கிலோ மீட்டர்) தினசரி ரூ.210, மாதம் ரூ.6 ஆயிரத்து 300, மதுரை (459 கிலோ மீட்டர்) தினசரி ரூ.300, மாதம் ரூ.9 ஆயிரம், கோவை (510 கிலோ மீட்டர்) தினசரி ரூ.330, மாதம் ரூ.9 ஆயிரத்து 900, சேலம் (341 கிலோ மீட்டர்) தினசரி ரூ.210, மாதம் ரூ.6 ஆயிரத்து 300, நெல்லை (622 கிலோ மீட்டர்) தினசரி ரூ.390, மாதம் ரூ.11 ஆயிரத்து 700, தூத்துக்குடி (601 கிலோ மீட்டர்) தினசரி ரூ.390, மாதம் ரூ.11 ஆயிரத்து 700, செங்கோட்டை (645 கிலோ மீட்டர்) தினசரி ரூ.390, மாதம் ரூ.11 ஆயிரத்து 700, நாகர்கோவில் (698 கிலோ மீட்டர்) தினசரி ரூ.420, மாதம் ரூ.12 ஆயிரத்து 600.

கன்னியாகுமரி (740 கிலோ மீட்டர்) தினசரி ரூ.450, மாதம் ரூ.13 ஆயிரத்து 500, மார்த்தாண்டம் (728 கிலோ மீட்டர்) தினசரி ரூ.450, மாதம் ரூ.13 ஆயிரத்து 500, திண்டுக்கல் மற்றும் காரைக்குடி (428 கிலோ மீட்டர்) தினசரி ரூ.270, மாதம் ரூ.8 ஆயிரத்து 100, ஓசூர் (317 கிலோ மீட்டர்) தினசரி ரூ.210, மாதம் ரூ.6 ஆயிரத்து 300, நாகப்பட்டினம் (353 கிலோ மீட்டர்) தினசரி ரூ.240, மாதம் ரூ.7 ஆயிரத்து 200 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

மேற்கண்ட தகவல்களை அரசு விரைவுப் போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறினார்கள்.


Next Story