அரசு பள்ளிக்கு பூட்டு போட்டு பெற்றோர்கள் போராட்டம்


அரசு பள்ளிக்கு பூட்டு போட்டு பெற்றோர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 8 Dec 2022 7:00 PM GMT (Updated: 8 Dec 2022 7:00 PM GMT)

வேடசந்தூர் அருகே ஒரு மாதமாக ஆசிரியர் நியமிக்கப்படாததால், அரசு பள்ளிக்கு பூட்டு போட்டு பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

ஊராட்சி ஒன்றிய பள்ளி

வேடசந்தூர் அருகே உள்ள அழகாபுரியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 155 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு தலைமை ஆசிரியர் உள்பட 8 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு, 2-ம் வகுப்புக்கு இடைநிலை ஆசிரியை ஒருவர் பாடம் நடத்தி வந்தார். அவர் மாணவ, மாணவிகளை ஆபாச வார்த்தைகளில் பேசி, தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பு வட்டார தொடக்க கல்வி அலுவலரிடம் பெற்றோர்கள் புகார் கொடுத்தனர்.

பூட்டு ேபாட்டு போராட்டம்

இதையடுத்து அந்த ஆசிரியை கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிடப்பட்டது. இந்தநிலையில் கடந்த மாதம் அவர் மீண்டும் வேலைக்கு வந்தார். இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து அந்த ஆசிரியை மீண்டும் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிகிறது. அதன் பின்னர் ஒரு மாதமாக பள்ளிக்கு வேறு ஆசிரியர் நியமிக்கப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று பள்ளிக்கு பெற்றோர்கள் சிலர் வந்தனர். அவர்கள் ஆசிரியர் நியமிக்கப்படாததால் ஆத்திரம் அடைந்தனர். உடனே அவர்கள் 1-ம் வகுப்பு அறையை பூட்டு போட்டு பூட்டினர். பின்னர் பள்ளி வளாகத்துக்குள் மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனே பெற்றோர்களிடம், தலைமை ஆசிரியர் ஜோஸ்பின் சகாயமேரி பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் வேறு ஆசிரியரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை ஆசிரியர் உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் பள்ளியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story