தாரமங்கலம் அருகே பரபரப்பு பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் பெற்றோர் சாலைமறியல் போராட்டம் பொக்லைன் எந்திரம் கொண்டு தண்ணீரை வெளியேற்றி அதிகாரிகள் நடவடிக்கை
தாரமங்கலம் அருகே பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் பெற்றோர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொக்லைன் எந்திரம் கொண்டு தண்ணீரை வெளியேற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
தாரமங்கலம்
பள்ளி வளாகத்தில் மழைநீர்
தாரமங்கலம் அருகே அமரகுந்தியில் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 190 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 20 குழந்தைகள் படித்து வருகின்றனர்.நேற்று இரவு பெய்த கனமழையால் சாலையில் மழைநீர் பெருகெடுத்து ஓடியது. அருகில் உள்ள வயல்வெளியில் தேங்கிய தண்ணீர் பள்ளி வளாகத்துக்குள் புகுந்தது. மழைநீர் வெளியேற வழியில்லாமல் வளாகத்தில் குளம் போல் தேங்கியது. இதனால் வழக்கம் போல் காலையில் பள்ளிக்கு வந்த மாணவர்கள், பள்ளிக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.
சாலைமறியல்
இதனை அறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளிக்கு திரண்டு வந்தனர். பள்ளியில் மழைக்கால முன்னெச்சரிக்கை மேற்கொள்ளாத பள்ளி நிர்வாகத்தையும், அதிகாரிகளையும் கண்டித்து தாரமங்கலம்- தொளசம்பட்டி சாலையில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன், ஒன்றியக்குழு தலைவர் சுமதிபாபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அனுராதா, தாசில்தார் வல்லமுனியப்பன், வருவாய் ஆய்வாளர் முருகேசன், கிராம நிர்வாக அதிகாரி செல்வம், பஞ்சாயத்து தலைவர் பாக்கியம் உள்ளிட்டவர்கள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை
பேச்சுவார்த்தையில் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்காத வகையில் மண் கொட்டி நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
அதன்பிறகு பொதுமக்கள் சமரசம் அடைந்தனர். பெற்றோர், பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்து சென்றனர். பள்ளியில் ஆசிரியர்கள் மட்டும் இருந்தனர். இந்த சம்பவத்தால் அமரகுந்தியில் பரபரப்பு ஏற்பட்டது.