மாணவர்களை வகுப்புக்கு அனுப்பாமல் பெற்றோர் போராட்டம்


மாணவர்களை வகுப்புக்கு அனுப்பாமல் பெற்றோர் போராட்டம்
x

மகுடஞ்சாவடி அருகே அரசு பள்ளிக்கு ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க கோரி, மாணவர்களை வகுப்புக்கு அனுப்பாமல் பெற்றோர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்

இளம்பிள்ளை

மகுடஞ்சாவடி அருகே அரசு பள்ளிக்கு ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க கோரி, மாணவர்களை வகுப்புக்கு அனுப்பாமல் பெற்றோர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெற்றோர் போராட்டம்

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே அ.தாழையூர் ஊராட்சி ஊஞ்சக்காடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 147 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இவர்களில் முதலாம் வகுப்பில் இருந்து 5-ம் வகுப்பு வரை 95 மாணவர்களும் 6-ம் வகுப்பில் இருந்து 8-ம் வகுப்பு வரை 52 மாணவ-மாணவிகளும் படித்து வருகின்றனர். குறிப்பாக இடையன்காடு, ஊஞ்சக்காடு, தாழையூர், சுண்டாக்கல், மாமரத்துக்காடு, அத்திமரப்பட்டி, கொல்லம்பாளையம், ரங்கமுத்தானூர் உள்பட அருகில் உள்ள கிராமங்களில் இருந்து வந்து இந்த பள்ளியில் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதாக கூறி, நேற்று காலை மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு வந்தனர். போதிய ஆசிரியர்கள் வந்தால் தான் மாணவர்களை பள்ளி வகுப்பறைக்கு அனுப்புவோம் என்று பள்ளி வகுப்பறையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பள்ளி வளாகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதையறிந்த மகுடஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு, வட்டார கல்வி அலுவலர் முருகேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது தற்போது தற்காலிகமாக மாங்குட்டப்பட்டிலிருந்து தங்கராஜ் என்ற ஆசிரியர் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும், மேலும் உயர் அதிகாரிகளிடம் பேசி பணி மாறுதல் பெற்று வர உள்ள ஆசிரியரையும் மற்றும் மாற்றுப் பணிக்காக சென்ற ஆசிரியரையும் பள்ளிக்கு உடனடியாக நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து காலையில் இருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மதியம் 2 மணியளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து மாணவர்கள் வகுப்பறைக்கு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story