சுற்றுச்சுவரை இடித்தவர்களை கைது செய்யக்கோரி பெற்றோர்கள், மாணவர்கள் போராட்டம்
திருக்கட்டளை அரசு பள்ளியின் சுற்றுச்சுவரை இடித்தவர்களை கைது செய்யக்கோரி பெற்றோர்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம்
திருவரங்குளம் அருகே திருக்கட்டளையில், அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்கூட சுற்றுச்சுவர் பகுதிகளில் சமூக விரோதிகள் சிலர் அமர்ந்து மது குடிப்பது, பள்ளியை சுற்றி இயற்கை உபாதை கழித்து வந்தனர்.
இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளியில் சுற்றுச்சுவரை அவர்கள் இடித்து தள்ளி விட்டனர். இதனை கண்டித்தும், சுற்றுச்சுவரை இடித்து தள்ளியவர்களை கைது செய்யக்கோரியும் மாணவர்கள்,பெற்றோர்கள் பள்ளி முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கலைந்து சென்றனர்
இதுகுறித்து தகவல் அறிந்த திருவரங்குளம் போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறினர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மேலும் மாணவ-மாணவிகளை வகுப்புகளுக்கு பெற்றோர்கள் அனுப்பி வைத்தனர்.