பள்ளிக்குழந்தைகளுடன் பெற்றோர் சாலை மறியல்


பள்ளிக்குழந்தைகளுடன் பெற்றோர் சாலை மறியல்
x

நெமிலியில் கீழ்வீதி அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டக்கோரி பள்ளிக்குழந்தைகளுடன் பெற்றோர்கள் சாலை மறியலில்

ராணிப்பேட்டை

வாடகை கட்டிடத்தில்

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே உள்ள கீழ்வீதி கிராமத்தில் அரசு ஆதி திராவிட தொடக்க பள்ளி செயல்பட்டுவருகிறது. இப்பள்ளியில் 40-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 2021-ம் ஆண்டு பள்ளிக்கட்டிடம் மிகவும் பழுதடைந்துள்ளதாக கூறி இடித்து அப்புறப்படுத்தபட்டது. அதன்பிறகு அதே பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் பள்ளி செயல்பட்டு வருகிறது.

புதிய கட்டிடம் கட்ட ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட வில்லை. பள்ளிகுழந்தைகளின் பெற்றோர்கள் ஏற்கனவே மாவட்ட கலெக்டரை சந்தித்து புதிய கட்டிடம் கட்டுவது தொடர்பாக கோரிக்கை மனுவும் அளித்துள்ளனர்.

சாலை மறியல்

தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் கட்டுமான பணியை தொடங்காததால் ஏற்கனவே ஒருமுறை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். தொடர்ந்து நேற்றும் குழந்தைகளை வகுப்பிற்கு அனுப்பாமல் புறக்கணிப்பு செய்தனர். இதனால் வகுப்பறை காலியாக காணப்பட்டது. பின்பு நெமிலி பஸ் நிலையத்திற்கு சென்று தங்கள் குழந்தைகளோடு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெமிலி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிலு தலைமையிலான போலீசார் சென்று மறியலில் ஈடுபட்டவவ்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story