பரியாமருதுபட்டி சேவுக பெருமாள் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
பரியாமருதுபட்டி சேவுகப்பெருமாள் கோவிலில் ஆனி உற்சவத்தை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
திருப்பத்தூர்
பரியாமருதுபட்டி சேவுகப்பெருமாள் கோவிலில் ஆனி உற்சவத்தை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேரோட்டம்
சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்டதும், ராணி மதுராந்தகநாச்சியார் ஆளுகைக்குட்பட்டதுமான நெற்குப்பை பரியாமருதுபட்டி பூரண புஷ்கலா சமேத சேவுகப்பெருமாள் கோவிலில் ஆனி உற்சவ விழா கடந்த 22-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் சுவாமி மண்டகப்படியார்களால் திருவீதி உலா நடைபெற்றது. 27-ந் தேதி துவார் கிராம மண்டகப்படியார்களால் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று 9-ம் திருநாளாக தேரோட்டம் நடைபெற்றது.
முன்னதாக அதிகாலை 5 மணிக்கு பூரண புஷ்கலா சமேத சேவுகப்பெருமாள் திருத்தேர் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சாமிக்கு பகல் முழுவதும் பக்தர்களின் சாமி தரிசனமும் மற்றும் அர்ச்சனை தீபாராதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாலை 4.25 மணிக்கு நெற்குப்பை வடக்குதெரு, கீழத்தெரு துவார் உள்ளிட்ட கிராம மக்கள் வடம் பிடிக்க தேர் நான்கு ரத வீதி வழியாக வலம் வந்து 5.56 மணிக்கு நிலையை அடைந்தது.
மாங்கனி
இந்நிகழ்ச்சியில் கோவில் கண்காணிப்பாளர் தண்ணாயிரம், நெற்குப்பை பேரூராட்சி தலைவர் பழனியப்பன் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பெரும்பாலான பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனை நிவர்த்தி செய்யும் வகையில் தேர் வலம் வரும் பாதை முழுவதும் மாங்கனிகளை பக்தர்கள் வழங்கினர்.
விழாவையொட்டி திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆத்மநாபன் தலைமையில் நெற்குப்பை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.