ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க 5-வது நாளாக தடைவிதிப்பு


ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க 5-வது நாளாக தடைவிதிப்பு
x
தினத்தந்தி 20 Aug 2023 6:18 AM GMT (Updated: 20 Aug 2023 6:30 AM GMT)

ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க 5-வது நாளாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல்,

கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கே.ஆர்.எஸ், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் இன்று காலை கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 12,776 கனஅடியும், கபினியில் இருந்து 5 ஆயிரம் கனஅடி என மொத்தம் 17,776 கனஅடி தண்ணீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு காலை முதலே சுற்றுலா பயணிகள் வருவது அதிகரித்து காணப்படுகிறது.

அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் தொங்கு பாலத்தில் நின்று அருவிகளில் தண்ணீர் விழுவதை பார்த்தனர். மேலும், மெயின் அருவி, சீனி அருவி ஆகிய அருவிகளில் குளித்தும் மகிழ்ந்தனர். நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால் தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் பரிசல் இயக்க இன்று 5-வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


Next Story