போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்திவைப்பு
சீர்காழியில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி:
சீர்காழியில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்து நெரிசல்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர் பகுதிக்கு உட்பட்ட கடைவீதி, கொள்ளிடம் முக்கூட்டு, பிடாரி வடக்கு வீதி, தெற்கு வீதி, ஈவேரா சாலை, ஈசானிய தெரு, அரசு ஆஸ்பத்திரி சாலை, கச்சேரி ரோடு, தென்பாதி, சிதம்பரம் சாலை, ரெயில்வே ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள், உணவு விடுதிகள் மற்றும் கடைகள் உள்ளன. மேற்கண்ட பகுதிகளில் உள்ள சாலைகள் குறுகளாக இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து தடை ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சீர்காழி நகர் பகுதியில் முக்கிய சாலைகளில், சாலை விதிகளுக்கு மாறாக லாரிகள் உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் சாலையின் இரு புறங்களிலும் நிறுத்திவைத்து பொருட்களை ஏற்றி இறக்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பள்ளி நேரங்களில்...
மேலும் பள்ளி நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக கடைவீதி பகுதிகளில் உள்ள கடைகளுக்கு முன்பு சாலையில் சரக்கு லாரிகள் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைப்பதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அனைத்து தரப்பினரும் அவதிப்படுகின்றனர்.
இதனால் பஸ்கள் நீண்ட நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீர்காழி நகர் பகுதியில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக சாலைகளில் நிறுத்தி வைத்திருக்கும் வாகன ஓட்டுனர்கள் அல்லது உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவர்கள் அவதி
இதுகுறித்து பள்ளி மாணவர்கள் கூறுகையில், சீர்காழி நகர் பகுதியில் காலை மாலை பள்ளி நேரங்களில் சீர்காழி நகர் பகுதியில் உள்ள பெரும்பான்மையான முக்கிய சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சரக்கு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த நேரத்திற்கு பள்ளிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.
காலம் தாழ்ந்து சென்றால் ஆசிரியர்கள் பள்ளிக்குள் அனுமதிக்க மறுத்து வருகின்றனர். இதனால் படிப்பு வீணாகி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சீர்காழி நகர் பகுதிக்குள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வரும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.