பரோலில் வந்த ஆயுள்தண்டனை கைதி தப்பி ஓட்டம்


பரோலில் வந்த ஆயுள்தண்டனை கைதி தப்பி ஓட்டம்
x

பரோலில் வந்த ஆயுள்தண்டனை கைதி தப்பி ஓட்டம்

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை அருகே பரோலில் வந்து தப்பி ஓடிய ஆயுள்தண்டனை கைதியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆயுள் தண்டனை கைதி

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சிராங்குடி வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் என்கிற சத்யராஜ் (வயது 34). இவர் கரூர் மாவட்டம் மாயனூர் போலீஸ் நிலைய சரக எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் இவரை மாயனூர் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை நீதிபதி விசாரணை செய்து சத்யராஜ் குற்றவாளி என்று முடிவு செய்து ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனால் இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 17-ந் தேதி முதல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்தநிலையில் சத்யராஜின் அப்பாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரை பார்ப்பதற்காக பரோலில் சத்யராஜ் வெளியே வந்தார்.

தப்பி ஓட்டம்

3 நாட்கள் பரோல் விடுப்பு வழங்கப்பட்டதையடுத்து 3 ஆயுதப்படை போலீசாரின் பாதுகாப்புடன் சிராங்குடி வடக்கு கிராமத்திற்கு கடந்த 7-ந் தேதி வந்தார். நேற்றுடன் அவருக்கு பரோல் விடுப்பு முடிவடைந்தநிலையில் தன்னை மீண்டும் சிறையில் அடைத்துவிடுவார்களோ? என எண்ணிய சத்யராஜ் நேற்றுஅதிகாலை 5 மணி அளவில் போலீசாரின் பாதுகாப்பை மீறி தப்பி ஓடிவிட்டார்.

இதை அறிந்த ஆயுதப்படை போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது குறித்து மதுக்கூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் தப்பி ஓடிய சத்யராஜை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய சத்யராஜை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்ட்டுள்ளது. அவர்கள் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story