செல்லியம்பாளையத்தில் தேர்த்திருவிழாவை நடத்துவது யார்? ஆத்தூரில் சமாதான கூட்டத்தில் கோஷ்டி மோதல்


செல்லியம்பாளையத்தில் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை நடத்துவது தொடர்பாக ஆத்தூர் தாசில்தார் நடத்திய சமாதான பேச்சுவார்த்தையில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதையடுத்து சாலைமறியல் செய்தவர்கள் போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.

சேலம்

ஆத்தூர்

செல்லியம்பாளையத்தில் தேர்த்திருவிழா

ஆத்தூர் அருகே உள்ள செல்லியம்பாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் ஆவணி மாதம் இந்த கோவில் தேர்த்திருவிழாவை, ஒரு தரப்பினர் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து கோவில் தேர்த்திருவிழாவை தங்கள் தரப்பு நடத்த அனுமதிக்க வேண்டும் என வருவாய்த்துறையினரிடம் மனு அளித்திருந்தனர். இரு தரப்பினரையும் ஏற்கனவே 2 முறை அழைத்து ஆத்தூர் தாசில்தார் மாணிக்கம் மற்றும் வருவாய் துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

3-வது முறையாக பேச்சுவார்த்தை

இந்த நிலையில் நேற்று 3-வது முறையாக ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் மாணிக்கம் முன்னிலையில் செல்லியம்பாளையம் தேர்த்திருவிழா தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. இதில் இருதரப்பை சேர்ந்த தலா 7 பேர் வீதம் 14 பேர் அழைக்கப்பட்டு இருந்தனர்.

சமாதான பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருந்தபோது திடீரென இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் வாக்குவாதம் முற்றி இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் எதிர்தரப்பை சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

பொதுமக்கள் ஓட்டம்

ஆத்தூர் தாலுகா அலுவலகம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். பொது மக்கள் தங்களது பணிகளுக்காக தாசில்தார் அலுவலகத்திற்கு வருவது வழக்கம். இந்த மோதல் சம்பவத்தை பார்த்தவுடன் பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் ஆத்தூர் டவுன் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் விரைந்து வந்து மோதலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தி காயம்பட்டவர்களை ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு கூறினர்.

சாலைமறியல்

ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சென்ற இடத்தில் ஆஸ்பத்திரி முன்பு மீண்டும் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. இருதரப்பினரும் கைகளால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு, அரசு ஆஸ்பத்திரிக்குள் செல்லுமாறும், மற்றவர்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர்.

இதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றவர்கள் ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம் முன்பு சேலம்-ஆத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர்.

தள்ளுமுள்ளு

அப்போது போலீசாருக்கும், சாலை மறியல் செய்தவர்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினார். மேலும் செல்லியம்பாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் முன்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மோதலில் ஈடுபட்டதாக இருதரப்பை சேர்ந்தவர்கள் மீதும் கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வன் கொடுத்த புகாரின் பேரில் 54 பேர் மீது ஆத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சாலை மறியலில் ஈடுபட்ட 60 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று ஆத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story