கடலூரில் பாஜக பேனர்களை அகற்ற கட்சியினர் எதிர்ப்புமாநகராட்சி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
கடலூரில் பா.ஜ.க. பேனர்களை அகற்ற வந்த மாநகராட்சி ஊழியர்களிடம் கட்சியினர் வாக்குவாதம் செய்து எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பா.ஜ.க. மாநில செயற்குழு கூட்டம் கடலூரில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது. கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரை வழங்குகிறார். இதில் மாநிலம் முழுவதும் உள்ள மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.
இந்நிலையில் மாநில தலைவர் அண்ணாமலையை வரவேற்று, திருமண மண்டபம் எதிரே அக்கட்சியினர் பிரமாண்ட பேனர்களை வைத்துக்கொண்டிருந்தனர். இதை அறிந்ததும் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் உத்தரவின்பேரில் நகரமைப்பு அலுவலர் முரளி மற்றும் ஊழியர்கள், கடலூர் புதுநகர் போலீசாருடன் வந்து, அனுமதியின்றி பேனர்களை வைக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
வாக்குவாதம்
இதை அறிந்ததும் அங்கு ஏராளமான கட்சி நிர்வாகிகள் திரண்டனர். தொடர்ந்து அவர்கள் கடந்த 10 நாட்களுக்கு முன்பே அனுமதி கேட்டு மனு அளித்து விட்டோம். ஆனால் இது வரை அனுமதி தரவில்லை. மற்ற கட்சியினருக்கு மட்டும் பேனர் வைக்க எப்படி அனுமதி அளிக்கிறீர்கள்? என்று கேட்டு மாநகராட்சி ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். தகவல் அறிந்ததும் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால்பாரி சங்கர் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், மாநகராட்சி அனுமதி பெற்று தான் பேனர் வைக்க வேண்டும் என்றார். உடன் கட்சி நிர்வாகிகள், மாநகராட்சி ஆணையாளரிடம் ஏற்கனவே அனுமதி கேட்டு விட்டோம். ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை என்றனர்.
பேச்சுவார்த்தை
இதையடுத்து பேனர் வைப்பது தொடர்பாக மாநகராட்சி அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்துக்கு வருமாறு கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி ஆணையாளர் நவேந்திரன் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. இதில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்தனர்.
இது பற்றி ஆணையாளரிடம் கேட்ட போது, அனுமதியின்றி பேனர் வைக்கக்கூடாது என்றும், மீறி பேனர்கள் வைத்தால் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்படும் என்று கூறியதாக தெரிவித்தார். இது பற்றி மாவட்ட தலைவர் மணிகண்டனிடம் கேட்ட போது, ஏற்கனவே இருக்கும் இடத்தில் பேனர் வைத்துக்கொள்ளவும், புதிதாக பேனர் வைக்க வேண்டாம் என்று கூறியதாகவும், அதன்படி பேனர் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். இருப்பினும் இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.