கட்சி ஒற்றுமையாக இருக்கவேண்டும்; கூட்டுத்தலைமை தொடரவேண்டும் - அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்
கட்சி ஒற்றுமையாக இருக்கவேண்டும், கூட்டுத்தலைமை தொடரவேண்டும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
தஞ்சை,
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளருமான வைத்திலிங்கம் தஞ்சையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
பாஜக தலைவர்கள் நேற்று அண்ணன் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்தனர், அண்ணன் ஓ.பன்னீர் செல்வத்தையும் சந்தித்தனர்.
ஓ.பி.எஸ். தரப்பில் தேர்தல் ஆணையத்தில் முறையிட உள்ளதாக வெளியான தகவல் தவறானது.
ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் மனு தாக்கல் செய்த நிகழ்வில் பங்கேற்கவே ஓ.பி.எஸ். டெல்லி சென்றுள்ளார்.
எங்கள் தரப்பின் நம்பிக்கை கட்சி ஒன்றாக இருக்க வேண்டும். மீண்டும் அம்மாவின் எண்ணப்படி ஆட்சிக்கு வர வேண்டும். ஒற்றுமை வேண்டும். கூட்டுத்தலைமை வேண்டும். இதுதான் எங்கள் எண்ணம்.
சட்டத்திற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட அந்த தீர்மானத்தை எதிர்த்து நாங்கள் வெளிநடப்பு செய்தோம்.
23 தீர்மானங்கள் தான் நிறைவேற்றப்படவேண்டும் மற்றவற்றை பற்றி விவாதிக்கலாம் ஆனால் எதுவும் நிறைவேற்றக்கூடாது என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதை மீறி அவர்கள் செயல்பட்டதால் அவர்கள் கொண்டுவந்த எல்லா தீர்மானமும் செல்லுபடியாகாது' என்றார்.