ஆக்கிரமிப்பால் அல்லல்படும் பயணிகள்


ஆக்கிரமிப்பால் அல்லல்படும் பயணிகள்
x
தினத்தந்தி 3 Oct 2023 6:45 PM GMT (Updated: 3 Oct 2023 6:46 PM GMT)

கள்ளக்குறிச்சி பஸ் நிலைய பாதை ஆக்கிரமிப்பால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தலைநகரான கள்ளக்குறிச்சியில் உள்ள பஸ் நிலையத்தில் இருந்து உள்ளூர் மற்றும் சேலம், ஈரோடு, ராசிபுரம், சென்னை, கடலூர், திருச்சி, பெரம்பலூர், சிதம்பரம், பெங்களூர், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளுக்கு 100-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் வெளியூர்களில் இருந்தும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. பஸ் பயணத்துக்காக நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து தினமும் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். இதனால் கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாகவே இருக்கும்.

இந்த பஸ் நிலையத்துக்கு பஸ்கள் ஒரு பாதை வழியாக உள்ளே சென்று இன்னொரு பாதை வழியாக வெளியே வருகின்றன. இதில் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே வரும் பாதையைத்தான் பணிகள் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் இந்த பாதை மிகவும் குறுகலாக உள்ளதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதாவது பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வரும் பாதையில் ஒரு பஸ் வந்தால் அதன் இருபுறமும் 5 அடி இடைவெளிதான் இருக்கும். இதன் வழியாகத்தான் பயணிகள் உள்ளே சென்று வர வேண்டும்.

இந்த சூழ்நிலையில் குறுகலான பாதையின் இருபக்கமும் சிலர் ஆக்கிரமித்து பூ உள்ளிட்ட சிறு வியாபாரம் செய்து வருகிறார்கள். இதனால் பஸ்நிலையத்துக்கு உள்ளே செல்லவும், வெளியே வரவும் பயணிகள் கடும் சிரமப்படுகின்றனர். அதேபோல் பஸ்களும் வெளியே வரும்போது நத்தை ஊர்வது போல ஊர்ந்து வர வேண்டிய நிலை உள்ளது. ஆத்திர அவசரத்தில் பஸ் பிடிக்க ஓடும் போது சில பயணிகள் தவறி விழுந்து காயம் அடைந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. எனவே பஸ்கள் வெளியே வரும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பயணிகள் சிரமமின்றி வந்து செல்லவும், பஸ்கள் எளிதாக வெளியே வருவதற்கும் வழிவகை செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பஸ் பயணிகள் சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது குறித்து பயணிகள் கூறும்போது, பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வரும் பாதை மிகவும் குறுகலாக இருப்பதால் உள்ளே வந்து செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. அந்த இடத்தில் பஸ்கள் வெளியே வரும்போது இருபக்கமும் உள்ள இடைவெளி வழியாகத்தான் சிரமப்பட்டு செல்ல வேண்டும். ஆனால் பாதையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்வதால் பஸ்கள் வரும்போது இருப்பக்கமும் போக்குவரத்து தடை ஏற்படுகிறது. அந்த இடத்தை பஸ்கள் கடந்து சென்ற பின்னர்தான் உள்ளே சென்று வர வேண்டிய சூழ்நிலை உள்ளது. அவ்வப்போது போக்குவரத்து போலீசாரும் வந்து ஆக்கிரமிப்பாளர்களை துரத்தி விட்டால் சில மணி நேரத்துக்கு பிறகு மீண்டும்அதே இடத்தில் வந்து ஆக்கிரமித்துக்கொள்கிறார்கள். எனவே இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story