காயமடைந்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க அரசு பஸ்சில் முதலுதவி பெட்டியில் மருந்துகள் இல்லாததால் பயணிகள் அதிர்ச்சி
அரசு பஸ்சில் காயம் அடைந்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க முதல் உதவி பெட்டியில் மருந்து பொருட்கள் இல்லாததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஊட்டி
அரசு பஸ்சில் காயம் அடைந்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க முதல் உதவி பெட்டியில் மருந்து பொருட்கள் இல்லாததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
சிறுவன் காயம்
மராட்டிய மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் ரிஸ்வான். இவர் தன் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வந்து அங்கிருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலாவுக்காக அரசுப் பஸ்சில் நேற்று காலை வந்து கொண்டிருந்தார்.
அப்போது குன்னூர்- ஊட்டி மலைப் பாதையில் பஸ் சென்று கொண்டிருந்தபோது, பிரேக் பிடித்ததில் முன் இருக்கையில் நீட்டிக்கொண்டிருந்த இரும்பில் ரிஸ்வானின் 5 வயது மகனின் தலை மோதி இருக்கிறது. இதனால் வலியால் அலறி துடித்த அந்த சிறுவனின் தலையில் ரத்த கசிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் பயந்து போன பெற்றோர், மருத்துவமனைக்கு செல்ல விரும்பினர்.
அதற்கு முன்னர் பஸ் முதல் உதவி பெட்டியில் உள்ள சிகிச்சைக்கான பேண்டேஜ் உள்ளிட்ட மருத்துவப் பொருட்களை வைத்து முதலுதவி சிகிச்சை செய்து அதன் பின்னர் மருத்துவமனை செல்ல முடிவு செய்தனர்.
காலியாக கிடந்த முதலுதவி பெட்டி
எனவே உடனடியாக முதலுதவி பெட்டியில் உள்ள மருந்து பொருட்களை எடுத்து தருமாறு கண்டக்டரிடம் கூறியுள்ளனர்.
ஆனால் முதலுதவி பெட்டியில் மருந்து பொருட்கள் இல்லை என கண்டக்டர் கூறியதாக தெரிகிறது. இதனால் செய்வது அறியாத திகைத்த பெற்றோர் சக பயணிகள் உதவியுடன் துணியை தலையில் கட்டி, ஊட்டி வந்து அங்கிருந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றனர்.
இதுகுறித்து பயணிகள் கூறுகையில், வெளி மாநிலத்திலிருந்து சுற்றுலா வந்த ஒரு சிறுவனுக்கு காயம் அடைந்த நேரத்தில் முதலுதவி சிகிச்சை கூட அளிக்க மருந்துகள் இல்லை என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. எனவே எல்லா பேருந்துகளிலும் முதலுதவி பெட்டி குறித்து ஆய்வு செய்து தேவையான மருந்து மாத்திரைகள் மற்றும் உபகரணங்களை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.