புதுக்கோட்டையில் நின்று செல்லும் அறிவிப்புக்கு பயணிகள் வரவேற்பு
அஜ்மீர் எக்ஸ்பிரஸ் ரெயில் புதுக்கோட்டையில் நின்று செல்லும் அறிவிப்புக்கு பயணிகள் வரவேற்பு அளித்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் இருந்து ராமேசுவரம்-அஜ்மீர் இடையே ஹம்சபார் எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் இயக்கப்படுகிறது. முற்றிலும் ஏ.சி. கோச் கொண்ட இந்த ரெயில் புதுக்கோட்டை வழியாக கடந்து சென்றாலும் இங்கு ரெயில் நிலையத்தில் நின்று செல்வதில்லை. இதனால் அஜ்மீர் எக்ஸ்பிரஸ் ரெயில் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் தெற்கு ரெயில்வேயில் இயக்கப்படும் சில ரெயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்கள் வழங்கி அறிவிப்பு வெளியானது. இதில் அஜ்மீர்-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் இரு மார்க்கத்திலும் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிப்பு வெளியானது. அதன்படி வருகிற 25-ந் தேதி முதல் அஜ்மீர் எக்ஸ்பிரஸ் ரெயில் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் நின்று செல்ல உள்ளது. அஜ்மீரில் இருந்து சனிக்கிழமையில் புறப்படும் ரெயில் புதுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு(திங்கட்கிழமை) மாலை 3.58 மணிக்கு வந்து மாலை 4 மணிக்கு புறப்படும். இதேபோல மறுமார்க்கத்தில் செவ்வாய்க்கிழமை ராமேசுவரத்தில் இருந்து அஜ்மீர் புறப்படும் ரெயில் புதன்கிழமை அதிகாலை 1.48 மணிக்கு வந்து 1.50 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் புதுக்கோட்டையில் நின்று செல்வதன் மூலம் சென்னை, ராஜஸ்தான் செல்ல வசதியாக இருக்கும். இந்த ரெயில் நின்று செல்லும் அறிவிப்புக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த ரெயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய தொடங்கி உள்ளனர்.