மதுரை பாஸ்போர்ட் ஊழலை உரிய காலத்தில் விசாரித்து இருந்தால் சர்ச்சை வந்திருக்காது
மதுரை பாஸ்போர்ட் ஊழலை உரிய காலத்தில் விசாரித்து இருந்தால் சர்ச்சை வந்திருக்காது என்றும், இதில் போலீஸ் அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு தொடர்பு இல்லை எனவும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை,
மதுரை பாஸ்போர்ட் ஊழலை உரிய காலத்தில் விசாரித்து இருந்தால் சர்ச்சை வந்திருக்காது என்றும், இதில் போலீஸ் அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு தொடர்பு இல்லை எனவும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
பாஸ்போர்ட் விவகாரம்
மதுரையை சேர்ந்த சுரேஷ் குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கடந்த 2013-ம் ஆண்டு பெறப்பட்ட எனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க விண்ணப்பித்த போது காவல்துறையினர் என் மீது குற்ற வழக்கு இருப்பதாக தெரிவித்தனர். நசுருதீன் என்பவர் மீதான வழக்கில் எனக்கும் தொடர்பு இருப்பதாக கருதி, இதுபோல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. நசுருதீன் என்பவர் எனது பயண ஏஜென்ட் மட்டும்தான். அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே எனது பாஸ்போர்ட்டை புதுப்பித்து வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
நசுருதீன் என்பவா் மீது கியூ பிரிவு போலீசார் தொடா்ந்த வழக்கில், மனுதாரரின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது. நசுருதீன் மனுதாரரின் பயண ஏஜென்ட் ஆக இருந்தவா். இவரை தவிர இருவருக்கும் வேறு எந்த தொடா்பும் இல்லை. எனவே, மனுதாரருக்கு பாஸ்போர்ட்டை புதுப்பிக்க தடையில்லை என கியூ பிரிவு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதை ஏற்றுக் கொண்டு மனுவை அனுமதிப்பதோடு விட்டுவிட, எனக்கு மனசாட்சி இடம் கொடுக்கவில்லை. மதுரை மற்றும் திருச்சியில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி நமது நாட்டைச் சோ்ந்தவா்கள் மற்றும் இலங்கையைச் சோ்ந்தவா்களுக்கு முறைகேடாக இந்திய பாஸ்போர்ட் பெற்றுள்ளனர். இதுதொடா்பாக பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
சி.பி.ஐ. விசாரணை
இதனிடையே, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக் கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டபோதும், அதை கியூ பிரிவு போலீசார் பின்பற்றவில்லை. இந்த பிரச்சினை குறித்து பா.ஜ.க. மாநிலத் தலைவா் அண்ணாமலை தற்போது கேள்வி எழுப்பியிருக்கிறாா்.
இந்த வழக்கு தொடா்பாக, கியூ பிரிவு போலீசார் தாக்கல் செய்துள்ள நிலை அறிக்கையில், 41 போ் மீது வழக்குத் தொடர முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள், மாநில காவல் துறை அதிகாரிகள் ஆகியோா் அடங்குவா். மத்திய அரசு அதிகாரிகள் 13 பேரிடம் விசாரிக்க அனுமதி கோரியதில், ஒருவரிடம் விசாரணை நடத்த அனுமதிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல, மாநகரக் காவல் நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையா் சிவக்குமாரிடம் விசாரணை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கிஉள்ளது. மேலும், ஒரு இன்ஸ்பெக்டர், 3 தலைமைக் காவலா்களும் விசாரிக்கப்பட உள்ளனா். இந்த வழக்கின் இறுதி அறிக்கை விரைவில் மதுரை மாவட்ட கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட உள்ளது எனத் தெரிவித்துள்ளனா்.
வழக்கமான சீராய்வு
இதன்படி, சம்பந்தப்பட்ட நீதிபதி, இந்த வழக்கில் விரைவில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
இந்த வழக்கு தேசிய பாதுகாப்பு மீது தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை நகரில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் நடந்த மோசடியானது, 54 பாஸ்போர்ட் முறைகேடாக வழங்குவதற்கு வழிவகுத்து உள்ளது. இந்த ஊழலில் ஈடுபட்டவா்கள் மீது விரைவில் வழக்கு தொடருவது அவசியம்.
பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் மீதான போலீஸ் விசாரணை எவ்வாறு நடைபெறும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. கள விசாரணை செய்யக்கூடிய தலைமைக் காவலா் முதல் காவல் உயா் அதிகாரி வரை பல கட்டங்களாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அறிக்கை சமா்ப்பிக்கப்படுகிறது. மாநகர போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்ட பாஸ்போர்ட் குறித்து சீராய்வு மேற்கொள்வது வழக்கம்.
அண்ணாமலைக்கு பாராட்டு
இந்த முறைகேடு நடந்த சமயத்தில், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் ஆக டேவிட்சன் தேவாசீா்வாதம் இருந்தாா். இருப்பினும் அவருக்கு எவ்வித தொடா்பும் இல்லை.
பாஸ்போர்ட் ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக இருக்கும் போலீஸ் துணை சூப்பிரண்டு மற்றும் உதவி ஆணையா், கமிஷனர் நிலையிலேயே விசாரணை அறிக்கை நடைமுறைகள் முடிந்துவிடுகிறது.
அதேநேரம், கோர்ட்டில் சி.பி.ஐ. விசாரணை கோருவதற்கு முன்பே இந்த வழக்கு தொடா்பாக, உரிய காலத்தில் விசாரணையை முடித்திருந்தால் தற்போது சா்ச்சைகள் எழ வாய்ப்பு இருந்திருக்காது. மேலும், இந்த பிரச்சினையை முன்னெடுத்ததற்காக பா.ஜ.க. மாநிலத் தலைவா் அண்ணாமலைக்கு பாராட்டுத் தெரிவிக்கப்படுகிறது. அவா் கேள்வி எழுப்பாமல் இருந்திருந்தால், இந்த பிரச்சினை வெளிச்சத்திற்கு வந்திருக்காது.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.