ஆதனக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி


ஆதனக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி
x

ஆதனக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதியடைந்து உள்ளனர்.

புதுக்கோட்டை

ஆரம்ப சுகாதார நிலையம்

ஆதனக்கோட்டையில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவ சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5 டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டிய நிலையில் ஒருவர் மட்டுமே தற்போது பணியாற்றி வருகிறார். இதனால் நோயாளிகள் குறித்த நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் நர்சு அல்லது பயிற்சி டாக்டர் இருக்கும் போது ஆபத்தான நிலையில் வரும் நோயாளிகளுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்படுவதாக நோயாளிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ரத்த பரிசோதனை, உடல் பரிசோதனை செய்வதற்காக வருபவர்கள் 5 முதல் 6 மணி நேரம் காத்திருந்து பரிசோதனை செய்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

திடீர் நெஞ்சுவலி

ஆதனக்கோட்டையை ேசர்ந்த விக்னேஷ்வரன்:- அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சை பெற வந்தால் நீண்ட நேரம் காத்திருந்து சிகிச்சை பெற வேண்டிய அவல நிலை உள்ளது. மதியத்திற்கு மேல் வந்தால் டாக்டர்கள் இருப்பதில்லை. பயிற்சி டாக்டர் அல்லது நர்சு மட்டுமே உள்ளார். இரவு நேரங்களில் நர்சு மட்டுமே பணியில் இருந்து சிகிச்சை அளிக்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வண்ணாரப்பட்டியை சேர்ந்த எனது மாமா ராமையாவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, அவரை உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றோம். அப்போது பணியில் பயிற்சி டாக்டர் மற்றும் நர்சு மட்டுமே இருந்தனர். அவரை பரிசோதித்த பயிற்சி டாக்டர் குறைந்த சர்க்கரை அளவினால் மயக்கம் ஏற்பட்டதாக கூறினார். இ.சி.ஜி. எடுத்து வாட்ஸ் அப் மூலம் வேறொருவருக்கு அனுப்பி அதன் பிறகு எங்களுக்கு விளக்கம் அளித்தார். இப்படி ஒரு மணி நேரத்துக்கு மேலாக அங்கேயே வைத்திருந்து வேறு மருத்துவமனைக்கு கொண்டு போக கூறினார்கள். நாங்கள் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கீரனூர் அருகே செல்லும்போது அவர் பரிதாபமாக இறந்தார். குறித்த நேரத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து எங்களை அனுப்பி இருந்தால் எனது மாமாவை காப்பாற்றி இருக்கலாம். எனவே ஆதனக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலியாக உள்ள டாக்டர் பணியிடங்களை நிரப்பி 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கர்ப்பிணிகளுக்கு மதிய உணவு

கல்லுக்காரன்பட்டியை சேர்ந்த லெட்சுமி:- எனது உறவினரான கர்ப்பிணி பெண்ணை ஆதனக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை அன்று அழைத்து சென்றேன். புற நோயாளிகள் சீட்டு வாங்குவதற்கே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருந்து சீட்டு வாங்குவதும், ரத்த பரிசோதனை செய்து அதன் முடிவை வாங்குவதற்கு 4 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. டாக்டர் பற்றாக்குறையால் பரிசோதனை செய்து சிகிச்சை பெற கிட்டத்தட்ட 6 மணி நேரத்திற்கு மேலாகிவிட்டது. நோயாளிகளுக்கு தேவையான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சரிவர வைப்பதில்லை. செவ்வாய்க்கிழமைகளில் சிகிச்சைக்காக 50லிருந்து 60-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் வருகிறார்கள். இவர்களுக்கு 15லிருந்து 20 கர்ப்பிணிகளுக்கு மட்டுமே மதிய உணவு வழங்கப்படுகிறது. சில நாட்களில் மதிய உணவும் வழங்கப்படுவது கிடையாது. கழிவறைகள் அசுத்தமாக இருப்பதால் நோயாளிகள் அதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல்வேறு அடிப்படை வசதிகள் சரிவர இல்லாததால் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

ரத்த பரிசோதனை

பழைய ஆதனக்கோட்டையை சேர்ந்த பூபாலன்:- ஆதனக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சி.பி.சி. எனப்படும் ரத்த செல்களின் எண்ணிக்கையை அளவிடக்கூடிய கருவி பல மாதங்களாக பழுதடைந்து உள்ளது. இங்கு வரக்கூடிய கர்ப்பிணிகள் மற்றும் ரத்த பரிசோதனை செய்யக்கூடிய நோயாளிகளுக்கு தனியார் ரத்த பரிசோதனை நிலையங்களில் ரத்த பரிசோதனை செய்துவர அனுப்பி வைக்கின்றனர். இதுவரை சி.பி.சி. கருவியை சரி செய்வதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. இதனால் பொதுமக்கள் தனியார் ரத்த பரிசோதனை நிலையம் சென்று பரிசோதனை செய்ய வேண்டிய அவல நிலை உள்ளது.


Next Story