புற்றுநோய்க்கு கதிரியக்க சிகிச்சை அளிக்க கருவிகள் இல்லாததால் நோயாளிகள் அவதி


புற்றுநோய்க்கு கதிரியக்க சிகிச்சை அளிக்க கருவிகள் இல்லாததால் நோயாளிகள் அவதி
x

புற்றுநோய்க்கு கதிரியக்க சிகிச்சை அளிக்க கருவிகள் இல்லாததால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.

திருச்சி

நோய்களில் மிக கொடிய நோயாக கருதப்படுவது புற்றுநோய் ஆகும். பெண்களுக்கு மார்பகம் மற்றும் கர்ப்பப்பை வாய், தோல், குடல் ஆகிய பகுதிகளில் இந்த நோய் தாக்கம் அதிகம் இருக்கிறது. ஆண்களுக்கு மலக்குடல், வாய், தொண்டை ஆகிய பகுதிகளில் அதிகம் ஏற்படுகிறது.

புற்றுநோய்

புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு திருச்சி மாவட்டம் மட்டுமின்றி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிகிச்சைக்காக ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். சாதாரண தொண்டை வலி சிகிச்சைக்காக வருபவர்களுக்கு பரிசோதனை செய்து பார்க்கும்போது பலருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுகிறது. அதேபோல் பெண்கள் பலருக்கும் கர்ப்பப்பை வாய், மார்பகம், குடல், உணவுக்குழல் பகுதிகளில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுகிறது. குறிப்பாக தனியார் ஆஸ்பத்திரியை விட திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் தான், மார்பக புற்றுநோய் மிகசிறிய அளவில் இருந்தாலும் அதை கண்டுபிடிக்கும் நவீன எந்திரம் சமீபத்தில் செயல்பாட்டுக்கு வந்தது.

கதிரியக்க சிகிச்சை

மேலும் திருச்சியில் புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை, ஹீமோதெரபி ஆகியவை மட்டுமே உள்ளன. இந்த சிகிச்சைகள் தேவைப்படும் நோயாளிகளுக்கு இங்கேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதேநேரம் பல நோயாளிகளுக்கு கதிரியக்க சிகிச்சை (ரேடியோதெரபி) அளிக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அந்த வசதி இல்லாததால் இன்று வரை அந்த நோயாளிகளை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைக்கிறார்கள்.

தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்றால், அங்கு திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் மட்டுமின்றி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் கதிரியக்க சிகிச்சைக்காக வருகிறார்கள். அவ்வாறு வருபவர்களுக்கு குறைந்தது ஒரு மாதம் முதல் 3 மாதங்கள் வரை தினமும் 10 முதல் 15 நிமிடங்கள் கதிரியக்க சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் அவர்களுக்கு அங்கேயே ஹீமோதெரபி சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.

படுக்கை வசதி இல்லை

வாரத்தில் 3 நாட்கள் தொடர்ந்து அளிக்கப்படும் ஹீமோதெரபி சிகிச்சை வார்டில் ஒரே நேரத்தில் 150-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்படுவதால், போதுமான படுக்கை வசதி இல்லாமல் தரையில் படுத்து சிகிச்சை பெறவேண்டிய நிலை உள்ளது. தஞ்சைக்கு சென்று சிகிச்சை பெற முடியாதவர்கள், தனியார் ஆஸ்பத்திரியை நாடும் நிலை உள்ளது.

மேலும் தஞ்சையில் ரேடியோதெரபி சிகிச்சை முடிந்து மீண்டும் அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்கள் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்குத்தான் வருகிறார்கள். எனவே தமிழகத்தின் மையப்பகுதியில் இருக்கும் திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கதிரியக்க சிகிச்சை வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

கிடப்பில் உள்ளது

இதை மனதில் கொண்டு திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கதிரியக்கத்துறை தலைவராக பணியாற்றிய டாக்டர் ரவி என்பவர் அதிநவீன ரேடியோதெரபி சிகிச்சை மேற்கொள்ள நவீன கருவியை கொண்டு வர வேண்டும் என்று முயற்சி மேற்கொண்டார். அப்போது இந்த திட்டத்திற்கு ரூ.12 கோடியில் ஒப்புதல் பெறப்பட்டது.

ஆனால் அந்த கோப்பு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் கிடப்பில் உள்ளது. இன்று வரை திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கதிரியக்க சிகிச்சை வசதி இல்லை. திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி கொண்டே தனியார் மருத்துவமனைகளிலும் பணியாற்றி வந்த சில டாக்டர்கள் செய்த அரசியல் காரணமாக இந்த கோப்புகள் அனைத்தும் முடக்கி வைக்கப்பட்டதாக நோயாளிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.

திருச்சியில் வேண்டும்

இதுபற்றி புற்று நோயாளியின் உறவினரான நவல்பட்டு அண்ணாநகரை சேர்ந்த குமரவேலு கூறியதாவது:-

எனது தந்தைக்கு வாயில் உள்ள புற்றுநோய்க்கு ரேடியோ தெரபி சிகிச்சைக்காக தினமும் தஞ்சாவூருக்கு வாடகை கார் அமர்த்தி அழைத்து சென்று வந்தோம். தற்போது, திருச்சியில் அறுவை செய்துள்ளோம். திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் முன்பு தினமும் 10 பேர் ஹீமோதெரபி சிகிச்சைக்கு வந்த நிலையில், தற்போது 100-க்கும் மேற்பட்டோர் வருவதாகவும், இங்கு அந்த சிகிச்சை நன்றாக அளிக்கப்படுவதாகவும் இங்குள்ள நோயாளிகளின் உறவினர்கள் கூறுகிறார்கள்.ஆனால், ரேடியோதெரபி சிகிச்சைக்காக தஞ்சைக்கு செல்ல வேண்டியிருந்ததால் அங்கேயே நாங்கள் ஹீமோதெரபி சிகிச்சை பெற்றோம். எங்களுடன் சிகிச்சைக்கு வந்தவர்களில் 50 சதவீதம் பேர் திருச்சி, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள்தான். தனியார் மருத்துவமனையில் இந்த சிகிச்சையை மேற்கொண்டால் ரூ.1.50 லட்சம் வரை செலவாகும். திருச்சியில் போதுமான இடவசதி உள்ளது. இங்கு ரேடியோதெரபி சிகிச்சை வசதி இருந்தால் இலவசமாக அந்த சிகிச்சையை பெற முடியும். எங்களை போன்ற நடுத்தர மக்கள் சிரமப்பட மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story