நாகூர் பட்டினச்சேரி கிராம மக்கள்அச்சப்பட வேண்டாம்


நாகூர் பட்டினச்சேரி கிராம மக்கள்அச்சப்பட வேண்டாம்
x

கடலில் கச்சா எண்ணெய் கசிந்தது தொடர்பாக நாகூர் பட்டினச்சேரி கிராம மக்கள் அச்சப்பட வேண்டாம் என அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

நாகப்பட்டினம்

நாகூர்:

கடலில் கச்சா எண்ணெய் கசிந்தது தொடர்பாக நாகூர் பட்டினச்சேரி கிராம மக்கள் அச்சப்பட வேண்டாம் என அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

கச்சா எண்ணெய் கசிவு

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் (சி.பி.சி.எல்.) சார்பில் நாகை மாவட்டம் நாகூர் அருகே பட்டினச்சேரி கிராமத்தில் கடற்கரையோரம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கச்சா எண்ணெய் எடுத்து செல்ல குழாய் பதிக்கப்பட்டது. இந்த குழாயில் கடந்த 2-ந் தேதி உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறி கடலில் கலந்தது.

இதை கண்டித்தும், சி.பி.சி.எல். நிறுவனம் சார்பில் புதைக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய் குழாய்களை முழுமையாக அகற்ற வலியுறுத்தியும் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

குழாய் சீரமைப்பு

இதனிடையே குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணிகள் நடந்தன. இந்த நிலையில் நேற்று அமைச்சர் மெய்யநாதன் நாகூர் பட்டினச்சேரியில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் சி.பி.சி.எல். நிறுவனம் சார்பில் புதைக்கப்பட்ட குழாயில் இருந்து கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதுதொடர்பாக வருகிற 16-ந் தேதி நாகை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது. அதுவரை சி.பி.சி.எல். நிறுவனம் எவ்வித பணிகளும் மேற்கொள்ள கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. எனவே இந்த பகுதியை சேர்ந்த மீனவ பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்.

முதல்-அமைச்சரின் நேரடி கண்காணிப்பில் மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது தமிழ்நாடு மீன்வளர்ச்சிக்கழக தலைவர் கவுதமன், கூடுதல் கலெக்டர் பிரத்திவிராஜ், உதவி கலெக்டர் பானோத்ம்ருகேத்லால், நாகை நகர சபை துணைத்தலைவர் செந்தில்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story