பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை கணக்கில் வராத ரூ.2 லட்சம் பறிமுதல்


பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில்   லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை  கணக்கில் வராத ரூ.2 லட்சம் பறிமுதல்
x

கணக்கில் வராத ரூ.2 லட்சம் பறிமுதல்

ஈரோடு

பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். கணக்கில் வராத ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

லஞ்சம் பெறுவதாக புகார்

பவானி ஊராட்சிக் கோட்டையில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

வாகனங்கள் பதிவு செய்தல், பெயர் மாற்றம் செய்தல், விரும்பும் வண்டி எண் பெறுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெறுகிறது. மேலும் ஓட்டுனர் உரிமம், சாலை வரி, மோட்டார் வாகன வரி செலுத்தவும் பொதுமக்கள் நாள்தோறும் இங்கு வந்து செல்கிறார்கள்.

இந்தநிலையில் உரிமம் பெறுதல் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் கட்டணம் பெறுவதாகவும், இடைத்தரகர்களை வைத்து லஞ்சம் வசூலிப்பதாகவும் ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இடைத்தரகர்கள்

இதையடுத்து நேற்று மாலை 4.20 மணி அளவில் ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகா, சென்னை மனித வள மேம்பாட்டுத்துறையின் கோவை மண்டலக்குழு துணைத் தலைவர் சாந்தாமணி ஆகியோர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீரென காரில் பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்துக்கு வந்தார்கள். பின்னர் அனைத்து கதவுகளையும் அடைத்தார்கள். அலுவலகத்தில் இருந்து யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. ஒவ்வொரு அறையாக சோதனை நடத்தினார்கள். அப்போது பணியில் இருந்தவர்களிடம் துருவி, துருவி விசாரணை நடந்தது.

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தியபோது அலுவலகத்தில் 19 பேர் இருந்தார்கள். இதில் 5 பேர்தான் ஊழியர்கள் என்பதும், எஞ்சிய 14 பேர் இடைத்தரகர்கள் என்பதும் தெரிந்தது. அவர்களிடம் முகவரி, செல்போன் உள்ளிட்ட விவரங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பெற்றார்கள்.

பணம் பறிமுதல்

மேலும் அப்போது பணியில் இருந்தவர்கள் வைத்திருந்த கணக்கில் காட்டாத ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்தையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தார்கள். சுமார் 2 மணி நேர சோதனைக்கு பிறகு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வெளியே வந்தார்கள். அப்போது அவர்கள், 'கணக்கில் காட்டாத பணத்தை பறிமுதல் செய்துள்ளோம். அதுகுறித்து விசாரணை நடைபெறும். அது லஞ்ச பணமாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 14 இடைத்தரகர்கள் குறித்து விவரம் பெற்றுள்ளோம். அவர்கள் மீதும் நடவடிக்கை பாயும்' என்று கூறினார்கள்.

பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீரென சோதனை நடத்தியது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story