உள்நோயாளிகள் சிகிச்சை பெற கட்டண அறை வார்டு


உள்நோயாளிகள் சிகிச்சை பெற கட்டண அறை வார்டு
x
தினத்தந்தி 28 Dec 2022 12:15 AM IST (Updated: 28 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளிகள் சிகிச்சை பெற கட்டண அறை வார்டு அமைப்பது தொடர்பாக மருத்துவ பணிகள் கழக பொதுமேலாளர் ஆய்வு செய்தார்.

கோயம்புத்தூர்

கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளிகள் சிகிச்சை பெற கட்டண அறை வார்டு அமைப்பது தொடர்பாக மருத்துவ பணிகள் கழக பொதுமேலாளர் ஆய்வு செய்தார்.

கட்டண அறை வார்டு

கோவை அரசு தலைமை மருத்துவமனையில் இதய சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை, நரம்பியல், எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை உள்பட பல்வேறு மருத்துவ பிரிவுகள் உள்ளன.

எனவே இங்கு கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்களும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

அவர்களில் பலர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்ற வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் கட்டணம் செலுத்தி உள்நோயாளிகள் சிகிச்சை பெற தனி வார்டு ஏற்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளது.

இது குறித்து ஆய்வு செய்வதற்காக மருத்துவ பணிகள் கழக பொதுமேலாளர் தீபக் ஜேக்கப் நேற்று கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவரை ஆஸ்பத்திரி டீன் (பொறுப்பு) டீன் சிவக்குமார் வரவேற்றார்.

ஆய்வு

பின்னர் மருத்துவ பணிகள் கழக பொதுமேலாளர் தீபக் ஜேக்கப் கோவை அரசு ஆஸ்பத்திரியில் கட்டண வார்டு அமைய உள்ள கட்டிடம், ஜைக்கா திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டு வரும் பல மாடி கட்டிடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர், அங்கிருந்த டாக்டர்களிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கோவை அரசு ஆஸ்பத்திரியில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் நோயாளிகளுக்கு எந்த அளவிற்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளது என்பதை கண்டறிய ரூ.20 கோடியில் பெட் சி.டி. எனப்படும் நவீன கருவி வாங்கப்பட உள்ளது.

இதன் மூலம் புற்றுநோய் குணமாகி விட்டதா என்பதை துல்லியமாக கண்டறியலாம்.

30 அறைகள்

இதுதவிர அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற எவ்வித கட்ட ணமும் பெறுவது இல்லை. தற்போது கட்டணம் செலுத்தி உள்நோயாளிகள் சிகிச்சை பெற வசதியாக கட்டண அறை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதில் முதற்கட்ட மாக 30 அறைகள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story