இரு பிரிவாக பிரிந்த தஞ்சை பூச்சந்தை வியாபாரிகள்: வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை


இரு பிரிவாக பிரிந்த தஞ்சை பூச்சந்தை வியாபாரிகள்:  வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை
x

பூச்சந்தை வியாபாரிகள் இரு பிரிவாக பிரிந்ததால் வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.

தஞ்சாவூர்

பூச்சந்தை வியாபாரிகள் இரு பிரிவாக பிரிந்ததால் வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.

அமைதி பேச்சுவார்த்தை

தஞ்சை விளார்சாலை பூக்காரத்தெருவில் பூச்சந்தை உள்ளது. விளார்சாலையை விரிவாக்கம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து இருப்பதால் பூச்சந்தையின் ஒரு பகுதியை அகற்ற திட்டமிடப்பட்டது. இதனால் அந்த பூச்சந்தையில் பூ வியாபாரம் செய்து வந்த 40 வியாபாரிகள் தஞ்சை பழைய பஸ் நிலையம் எதிரே உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் திடீரென பூ வியாபாரத்தை தொடங்கி உள்ளனர்.

சிலர் தொடர்ந்து பூக்காரத்தெருவிலேயே பூ வியாபாரத்தை தொடர்ந்தனர். பூ வியாபாரிகள் இருதரப்பாக பிரிந்து செயல்பட்டதால் தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நேற்றுமாலை நடந்தது. இதற்கு வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித் தலைமை தாங்கினார்.

சில்லறை வியாபாரிகள் பாதிப்பு

அமைதி பேச்சுவார்த்தையின்போது பூக்காரத்தெருவில் வியாபாரத்தை தொடரும் வியாபாரிகள் கூறும்போது, மொத்த வியாபாரிகள் பூச்சந்தையை விட்டு சென்றுவிட்டால் சில்லறை வியாபாரம் செய்து வரும் 600 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். பூக்காரத்தெருவிலேயே பூச்சந்தை தொடர வேண்டும் என ஆதார் அட்டைகளை கொடுத்து இருக்கின்றனர். எனவே மொத்த வியாபாரிகளும் இங்கேயே வியாபாரம் செய்ய வேண்டும். நாங்கள் தொடர்ந்து பூச்சந்தையில் தான் வியாபாரம் செய்வோம். எங்களுடன் வியாபாரம் செய்ய வருபவர்களை யாரும் தடுக்கக்கூடாது என்றனர்.

மாநகராட்சி வணிக வளாகத்திற்கு சென்ற பூ வியாபாரிகள் கூறும்போது, பூக்கடைகள் எங்கே சென்றாலும் வியாபாரம் நடக்க தான் செய்யும். சில்லறை வியாபாரிகள் பூக்களை தங்களது வீடுகளுக்கு வாங்கி சென்று மாலை கட்டி கொள்வார்கள். பூச்சந்தையில் மீண்டும் வியாபாரம் செய்ய தயாராக இல்லை. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ஒரு இடத்தை தேர்வு செய்து அனைத்து வசதிகளுடன் பூ வணிக வளாகம் கட்டி தர வேண்டும். பூச்சந்தையை ஏலம் எடுத்தவர்கள் கூடுதலாக வாடகை வசூல் செய்கின்றனர். அவர்களுடன் எங்களால் வியாபாரம் செய்ய முடியாது. எங்களை கட்டாயப்படுத்த வேண்டாம் என்றனர்.

ஏலம் ரத்து

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறும்போது, ஏலதாரர்கள் தான் பிரச்சினை என்றால் நாங்கள் பார்த்து கொள்கிறோம். ஜனவரி 1-ந் தேதி முதல் ஏலம் ரத்து செய்யப்பட்டு, நாங்களே பூச்சந்தையை நிர்வாகம் செய்கிறோம். பூ வியாபாரிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறோம். மொத்த வியாபாரிகளும் பூச்சந்தையிலேயே வியாபாரத்தை தொடர வேண்டும் என்றனர்.

ஆனால் இரு தரப்பினரும் தங்களது முடிவில் பிடிவாதமாக இருந்தனர். இதையடுத்து வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித் பேசும்போது, நீங்கள் விரும்பும் இடத்தில் வியாபாரத்தை தொடர்ந்து நடத்தி கொள்ளுங்கள். யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் உங்களால் பிரச்சினை ஏற்படக்கூடாது. சட்ட-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் பாகுபாடு இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், செயற்பொறியாளர் ஜெகதீசன், தாசில்தார் சக்திவேல், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா, போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பிராங்கிளின் மற்றும் அதிகாரிகள், பூ வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story