தங்கச்சிமடத்தில் அமைதி பேரணி
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து தங்கச்சிமடத்தில் அமைதி பேரணி நடந்தது.
ராமேசுவரம்,
மணிப்பூரில் சிறுபான்மையின மக்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதலை உடனடியாக தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும், மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்தி அங்கு அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தியும் ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தில் நேற்று மீனவ மக்கள் சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது. தூய தெரசாள் ஆலயத்தில் இருந்து தொடங்கிய இந்த அமைதி பேரணி தங்கச்சிமடம் முக்கிய தேசிய நெடுஞ்சாலை பகுதியான தர்கா பஸ் நிறுத்தம், முருகன் கோவில், வலசை பஸ் நிறுத்தம் தேசிய நெடுஞ்சாலை வழியாக குழந்தை இயேசு ஆலயத்தில் நிறைவடைந்தது.
இந்த அமைதி பேரணியில் பங்கு தந்தைகள் சுவாமிநாதன், செபஸ்தியான், சேசு ஜெயராஜ், ஆல்பர்ட், சுந்தர் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிதிகள் சேசுராஜா, எமரிட், சகாயம், ஆல்வின், ம.தி.மு.க. கட்சியின் மாநில மீனவர் அணி செயலாளர் பேட்ரிக், தமிழக வாழ்வுரிமை கட்சியின் இளைஞரணி செயலாளர் ஜெரோன்குமார் வக்கீல் டோமினிக் ரவி, முஸ்லிம் ஜமாத் தலைவர் ராஜா சாகிப், ஏராளமான மீனவர்களும், மீனவபெண்களும், பள்ளி மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டனர்.தங்கச்சி மடத்தில் நடந்த அமைதி பேரணியையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.