உரித்த தேங்காயை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்
விலை வீழ்ச்சியால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதால் உரித்த தேங்காயை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
பொள்ளாச்சி
விலை வீழ்ச்சியால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதால் உரித்த தேங்காயை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
ஆலோசனை கூட்டம்
தேங்காய் விலை வீழ்ச்சி பிரச்சினைக்கு தீர்வு காணுதல், பால் விலையை உயர்த்துதல் குறித்த ஆலோசனை கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. பி.ஏ.பி. நீர் பாதுகாப்பு இயக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் நித்தியானந்தம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தேங்காய், கொப்பரை தேங்காய் மற்றும் தென்னை நார் தொழில்களில் உள்ள பிரச்சினைகள் மற்றும் பால் விலை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:-
பொள்ளாச்சியில் நோய் தாக்குதல் மற்றும் தேங்காய்க்கு உரிய விலை இல்லாதது போன்ற காரணங்களால் தென்னை விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு பால் விலையை உயர்த்திய பிறகு இதுவரை விலை உயரவில்லை. கலப்பு தீவனம், இடுப்பொருட்கள் விலை உயர்ந்தும், பால் விலை உயரவில்லை. இதனால் இந்த தொழிலை நம்பி உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.
கொப்பரை தேங்காய்
மேலும் தென்னை நார் மற்றும் சார்பு பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களும் அரசின் பல்வேறு கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டு உள்ளது. பொள்ளாச்சியில் தேங்காய் மற்றும் அதை சார்ந்த தொழில்கள் பாதிக்கப்பட்டால் பொருளாதாரம் மிகவும் பாதிக்கும். எனவே அரசின் கவனத்திற்கு பிரச்சினைகளை கொண்டு சென்று தீர்வு காண திட்டமிடப்பட்டு உள்ளது. பால் உற்பத்தி செய்பவர்களின் சங்கத்தின் சார்பில் ஒரு லிட்டர் பால் ரூ.40 வரை உயர்த்த அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொப்பரை தேங்காயை கிலோ ரூ.150-க்கு கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் ஆண்டு முழுவதும் கொப்பரை தேங்காய் உற்பத்தி செய்ய வேண்டும். இதற்கிடையில் கொப்பரை தேங்காயாக மாற்ற போதிய வசதி இல்லாததால் உரித்த தேங்காயாக விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். பாமாயில் எண்ணெய் இறக்குமதி வரியை உயர்த்த வேண்டும். நம் நாட்டில் தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யும் நிலையில், அவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். தென்னை மற்றும் அதை சார்ந்த தொழில்களில் உள்ள பிரச்சினைகளை சரி செய்தால் மட்டுமே பொள்ளாச்சியின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.