மெரினாவில் பேனா சிலை; விரைவில் கருத்துக்கேட்புக் கூட்டம் - அமைச்சர் மெய்யநாதன் தகவல்


மெரினாவில் பேனா சிலை; விரைவில் கருத்துக்கேட்புக் கூட்டம் - அமைச்சர் மெய்யநாதன் தகவல்
x

மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், விரைவில் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

சென்னை,

தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி அளித்த பங்களிப்பினை நினைவுக்கூறும் வகையில் வங்கக்கடலின் நடுவே 'முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா' நினைவுச்சின்னம் அமைக்கப்பட உள்ளது. ரூ.80 கோடியில் அமைக்கப்பட உள்ள இந்த நினைவுச்சின்னம் கடல் மட்டத்தில் இருந்து 42 மீட்டர் உயரத்தில் அமைய இருக்கிறது.

பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கு, நிபந்தனைகளுடன் கூடிய முதற் கட்ட அனுமதியை தமிழக அரசுக்கு, மத்திய அரசின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு வழங்கியுள்ளது. அதன்படி, சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டத்தின்படி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை, பேரிடர் மேலாண்மை திட்டத்தின்படி இடர் மதிப்பீட்டு அறிக்கை, பொதுமக்களிடம் கருத்து கேட்பு மற்றும் அந்த திட்டம் தொடர்பான பிற ஆவணங்களை மாநில அரசு, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த நிலையில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், இன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், மெரினா கடற்கரையில் அமையவுள்ள பேனா சிலைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், விரைவில் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.


Next Story