விதிகளை மீறி வாகனம் இயக்கிய டிரைவர்களுக்கு அபராதம்
கல்லட்டி மலைப்பாதையில் விதிகளை மீறிய ஜீப் டிரைவா்களுக்கு அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த மசினகுடி பகுதியில் பல்வேறு தனியார் விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதிக்கு சுற்றுலா செல்ல விரும்புபவர்கள் கல்லட்டி மலைப்பாதை வழியாக செல்ல வேண்டும். அந்த மலைப்பாதையில் செல்வதற்கு உள்ளூர் ஓட்டுநர் உரிமம் வைத்து உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
இதனால் இந்த பகுதிக்கு சுற்றுலா செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகள் பலரும் அந்தப் பகுதியில் உள்ள ஜீப்களில் செல்கின்றனர்.
இந்தநிலையில் கல்லட்டி மலைப்பாதையில் தலைக்குந்தா- ஏக்குனி பகுதியில் விபத்து அதிகம் நடப்பதால், ஊட்டியில் இருந்து மசினகுடி செல்லும் வாகனங்கள் இடது புறமும், மசினகுடியில் இருந்து ஊட்டி வரும் வாகனங்கள் வலது புறமும் வரும் வகையில் சாலையில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தனியார் ஜீப்கள் சுற்றுலா பயணிகளை அழைத்துக்கொண்டு போட்டி போட்டு செல்வதால் இந்த விதிமுறையை பின்பற்றாமல் அதிவேகத்தில் செல்கிறது.
குறிப்பாக கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ஏக்குணி பகுதியில் 3 ஜீப்புகள் போட்டி போட்டுக் கொண்டு அசுர வேகத்தில் சென்றன. இந்தக் காட்சிகளை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். மேலும் இது குறித்து தினத்தந்தி நாளிதழில் கடந்த மாதம் 30-ந்தேதி செய்தி வெளியிடப்பட்டது.
இதன் பேரில் இன்ஸ்பெக்டர் அல்லிராணி தலைமையிலான போலீசார் சுமார் 10 ஜீப் டிரைவர்களை அழைத்து விசாரணை நடத்தினர். மேலும் இதில் அதி வேகமாக பயணம் செய்த 3 ஜூப் டிரைவர்களுக்கு மட்டும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மலைப்பகுதிகளில் வளைவுகள் அதிகம் நிறைந்த இடங்களில் விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே விதிகளை மீறி செல்லும் இந்த ஜீப்கள் குறித்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். தொடர்ச்சியாக விதிமுறைகளை மீறினால் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.