கூடுதல் கட்டணம் வசூலித்த அரசு பஸ்களுக்கு அபராதம்
கூடுதல் கட்டணம் வசூலித்த அரசு பஸ்களுக்கு அபராதம்
கோவை
கோவையில் கூடுதல் கட்டணம் வசூலித்த அரசு பஸ்களுக்கு அபராதம் விதித்ததுடன், பஸ்களில் பயன்படுத்திய அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.
அதிகாரிகள் சோதனை
கோவை மாநகர பகுதியில் இயக்கப்படும் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், அரசு மற்றும் தனியார் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்-ஹரன் பயன்படுத்துவதாகவும் கோவை மண்டல போக்குவரத்து இணை ஆணையாளருக்கு புகார் சென்றது. இது தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க போக்குவரத்து அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இதையடுத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சத்யகுமார் (கோவை மத்தியம்), பாலமுருகன் (தெற்கு மற்றும் மேற்கு) ஆகியோர் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் விஜயகுமார், வேலுமணி, செந்தில்ராம், விசுவநாதன், செல்வதீபா, தனசேகரன், சண்முகசுந்தரம், மற்றொரு வேலுமணி ஆகியோர் கோவை காந்திபுரம் டவுன் மற்றும் மத்திய பஸ்நிலையங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
பஸ்களுக்கு அபராதம்
அப்போது அங்கு வந்த அரசு மற்றும் தனியார் பஸ்களில் அதிரடி ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது பஸ்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்-ஹாரன் பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஏர்-ஹாரனை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், அவற்றை பயன்படுத்திய 14 பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதுதவிர அரசு மற்றும் தனியார் பஸ்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப் படுகிறதா என்றும் சோதனை செய்தனர். அதில் 2 அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கடும் நடவடிக்கை
இது குறித்து வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறும்போது, கோவையில் இதுபோன்ற சோதனை தொடர்ந்து நடத்தப்படும். எனவே விதிகளை மீறி அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்-ஹாரன்களை பயன்படுத்தினாலோ, கூடுதல் கட்டணம் வசூலித்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.