சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்


சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளின்  உரிமையாளர்களுக்கு அபராதம்
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.

ராணிப்பேட்டை

ஆய்வு கூட்டம்

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளின் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில், ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா, சோளிங்கர், அரக்கோணம், மேல்விஷாரம் ஆகிய நகராட்சிகளில் அம்ருத் திட்டத்தின் கீழ் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகளின் முன்னேற்றம், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் சாலை மேம்பாடு பணிகள், தெரு விளக்குகள், பூங்காக்கள், அறிவு சார் மையம் அமைக்கும் பணிகள், திடக்கழிவு மேலாண்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க நகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

அபராதம்

கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு ஒவ்வொரு நகராட்சியிலும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களை சுற்றியுள்ள இடங்கள், அரசு நிலங்கள் மற்றும் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் 10,000 -க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவேண்டும். சாலையோரங்களில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து உரிமையாளரிடம் அபராதம் வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பொதுமக்களை அச்சுறுத்தும் தெரு நாய்களை பிடித்து தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நகர பஸ் நிலையங்களில் கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும்.

மழைக்காலம் நெருங்கி வருவதால் நகராட்சி பகுதிகளில் நீர் நிலைகள் மற்றும் கழிவு நீர் கால்வாய்களை தூர் வாரி நீர் தேங்காத வகையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு பேசினார்.

கூட்டத்தில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் தனலட்சுமி, நகராட்சி ஆணையாளர் விநாயகம், பொறியாளர்கள் கணேசன், பரமுராஜ், ஆசீர்வாதம், கோபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story