சென்னை கடற்கரைகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் - மாநகராட்சி அறிவிப்பு


சென்னை கடற்கரைகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் - மாநகராட்சி அறிவிப்பு
x

மெரீனா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழக அரசால் ஒருமுறை பயன்படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், விற்பனை செய்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

முக்கிய சுற்றுலாத் தளமாக விளங்கும் மெரீனா கடற்கரையில் அமைந்திருக்கும் கடைகளில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் இருந்து வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அதிகாரிகள் அங்கு சோதனையில் ஈடுபட்டனர்.

அந்தவகையில் மெரீனா கடற்கரையில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய 18 கடை உரிமையாளர்களிடமிருந்து ரூ.1,800 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடற்கரை பகுதிகளை பிளாஸ்டிக் இல்லா கடற்கரை பகுதிகளாக பராமரிக்கும் வகையில் இன்று முதல் மாநகராட்சியின் சார்பில் மெரீனா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகளில் சம்பந்தப்பட்ட சுகாதார அலுவலர்கள் தலைமையில் காலை, மாலை என இருவேளைகளில் ஆய்வு செய்யப்பட்டு, பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்.

மேலும், அதிகபட்ச அபராதமும் விதிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டிருந்தது. எனவே, பொதுமக்கள் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கடற்கரை பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வரும் அல்லது பயன்படுத்தும் பொதுமக்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story