விதிமீறிய பஸ்களுக்கு ரூ.93 ஆயிரம் அபராதம் விதிப்பு
போக்குவரத்து விதிமீறிய பஸ்களுக்கு ரூ.93 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 2 ஆம்னி பஸ்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
போக்குவரத்து விதிமீறிய பஸ்களுக்கு ரூ.93 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 2 ஆம்னி பஸ்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதிக கட்டணம்
ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகை மற்றும் வார இறுதிநாட்களையொட்டி ஏராளமானவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். அவர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்து கழகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் ஆம்னி பஸ்களிலும் ஏராளமானவர்கள் பயணிப்பார்கள். தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. மேலும் தமிழகத்துக்கு செலுத்த வேண்டிய சாலை வரி செலுத்தாமல் பஸ்கள் இயக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது.
அதன்பேரில் சோதனை நடத்த போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து விழுப்புரம் சரக துணை போக்குவரத்து ஆணையர் ரஜினிகாந்த் மேற்பார்வையில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சிவக்குமார், சரவணன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தலைமையில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் திருவண்ணாமலை புறவழிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் சோதனை செய்தனர்.
2 பஸ்கள் பறிமுதல்
இந்த சோதனையில் சாலை வரி செலுத்தாத வெளி மாநிலத்தை சேர்ந்த 2 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ஆம்னி பஸ்கள் திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அந்த 2 பஸ்களுக்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் வரி நிர்ணயம் செய்யப்பட்டது. மேலும் ஒரு பஸ்சுக்கு ரூ.30 ஆயிரம் இணக்க கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.
மேலும் 35 ஆம்னி பஸ்களுக்கு பிற விதி மீறல்களுக்காக சோதனை அறிக்கை வழங்கப்பட்டு, ரூ.58,500 அபராதம் விதிக்கப்பட்டது. இது தவிர சில பஸ்களிடம் ரூ.35 ஆயிரம் அபராதமும் வசூலிக்கப்பட்டது.
மொத்தம் ரூ.93 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.