மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்
திண்டுக்கல் மாநகராட்சியில் சுற்றித் திரிந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாநகராட்சி சாலைகளில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. சில சமயத்தில், வாகனங்களில் அடிபட்டு மாடுகளும் காயமடைகின்றன. இதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகளை கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டு மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. எனினும் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவது தொடர்கதையாகி விட்டது.
இந்த நிலையில் நேற்று மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்களை கொண்ட குழுவினர் நகர் முழுவதும் சோதனை நடத்தினர். அப்போது பஸ்நிலையம், விவேகானந்தாநகர் உள்ளிட்ட பகுதிகளில் 4 மாடுகள் சாலையில் சுற்றித்திரிந்ததை அதிகாரிகள் பார்த்தனர். இதைத்தொடர்ந்து அந்த 4 மாடுகளையும் பிடித்து வாகனத்தில் ஏற்றி, மாநகராட்சி வாகன நிறுத்துமிடத்துக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மாடுகளின் உரிமையாளர்களுக்கு தகவல் கொடுத்து நேரில் வரவழைத்தனர். மேலும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் அபராதம் வசூலித்து விட்டு மாடுகளை விடுவித்தனர். மீண்டும் மாடுகள் சாலையில் சுற்றித்திரிய விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.