ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்கள் ஆயுள் சான்றினை சமர்ப்பிக்க வேண்டும்-தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்

நாமக்கல்:
நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஜெயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் தொடர்பான 18 அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் பதிவு, புதுப்பித்தல், கேட்பு மனுக்கள் போன்ற அனைத்து விண்ணப்பங்களும் tnuwwb.tn.gov.in என்கிற தொழிலாளர் துறை இணையதளம் மூலம் பெறப்படுகிறது.
தற்போது தமிழ்நாடு அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்று, மாதாந்திர ஓய்வூதியம் பெற்று வரும் தொழிலாளர்கள் 2023-2024-ம் ஆண்டிற்கான ஆயுள் சான்றினை வருகிற 30-ந் தேதிக்குள் https://tnuwwb.tn.gov.in/applicationlives/applicationlive என்ற இணையதளம் மூலம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
மாதாந்திர ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்கள் மேற்கண்ட இணையதளத்தில் தங்களுடைய ஆயுள் சான்றினை பதிவேற்றம் செய்ய ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, ஓய்வூதிய உத்தரவு நகல், போட்டோ, வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் நடப்பு மாதம் வரை வரவு, செலவு விவரம் ஆகிய ஆவணங்களுடன் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.






