ஓய்வூதியம் பெறுவோர் ஆயுள் சான்றினை இணையதள மூலம் சமர்ப்பிக்க வேண்டும்


ஓய்வூதியம் பெறுவோர் ஆயுள் சான்றினை இணையதள மூலம் சமர்ப்பிக்க வேண்டும்
x

கட்டுமான, அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் ஓய்வூதியம் பெறுவோர் ஆயுள் சான்றினை இணையதள மூலம் 30-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) வளர்மதி கூறி உள்ளார்.

திருவண்ணாமலை

கட்டுமான, அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் ஓய்வூதியம் பெறுவோர் ஆயுள் சான்றினை இணையதள மூலம் 30-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) வளர்மதி கூறி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

நலவாரியங்களில் பதிவு

தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் தொடர்பான 18 அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் பதிவு, புதுப்பித்தல் மற்றும் கேட்புமனுக்கள் போன்ற அனைத்து விதமான விண்ணப்பங்களும் tnuwwb.tn.gov.in என்ற தொழிலாளர் துறையின் இணையதள வாயிலாக பெறப்பட்டு வருகிறது.

தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமானம் மற்றம் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் பதிவு பெற்று 60 வயது நிறைவடைந்த ஓய்வூதியதாரர்கள் தொடர்ந்து மாதாந்திர ஓய்வூதியம் பெற வருடந்தோறும் தங்களது ஆயுள் சான்றினை உாிய ஆவணங்களை கொண்டு இணையவழியில் பதிவேற்றி விண்ணப்பிக்க வேண்டும்.

30-ந் தேதிக்குள்

அதன்படி கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா நலவாரியங்களில் ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியதாரர்கள் 2023-24-ம் ஆண்டிற்கான தங்களது வருடாந்திர ஆயுள் சான்றினை வருகிற 30-ந் தேதிக்குள் http://tnuwwb.tn.gov.in/applicationlives/applicationlive என்ற இணையதள முகவரி வாயிலாக உரிய ஆவணங்களுடன் சமர்பிக்க தெரிவிக்கப்படுகிறது.

எனவே மாதாந்திர ஓய்வூதிய பெறும் தொழிலாளர்கள் இந்த இணையதளத்தில் தங்களுடைய ஆயுள் சான்றினை பதிவேற்றம் செய்ய அசல் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, புகைப்படம் 1, வங்கி புத்தக நகல், நடப்பு மாதம் வரை வரவு - செலவு பரிவர்த்தனை விவரம் மற்றும் நலவாரிய அட்டை, ஓய்வூதிய உத்தரவு நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் அடங்கிய விவரங்களுடன் பதிவு பெற்ற தொழிற்சங்கங்கள் மூலமாகவோ, பொது சேவை மையம், சி.எஸ்.சி. கணினி மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு திருவண்ணாமலை காந்தி நகர் 8-வது தெருவில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story