குடும்ப பாதுகாப்பு நிதி-மருத்துவ படியை உயர்த்தி வழங்க ஓய்வூதியர்கள் வேண்டுகோள்
குடும்ப பாதுகாப்பு நிதி-மருத்துவ படியை உயர்த்தி வழங்க ஓய்வூதியர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் முத்துசாமி தலைமை தாங்கி பேசுகையில், நாளை (சனிக்கிழமை) திருச்சியில் நடைபெறும் சங்கத்தின் ஆண்டு விழாவிலும், வருகிற 21-ந்தேதி சென்னையில் நடைபெறும் சங்கத்தின் மாநில பேரவை கூட்டத்திலும், அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதி சங்க அலுவலகத்தில் நடைபெறும் முப்பெரும் விழாவிலும் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும், என்றார். துணைத் தலைவர் சிவலிங்கம் சென்ற மாத சங்க கூட்ட அறிக்கையை வாசித்தார். பொருளாளர் ஆதிசிவம் சென்ற மாத சங்க வரவு-செலவு அறிக்கையை வாசித்தார். கூட்டத்தில் தமிழக அரசின் 8-வது ஊதியக்குழு நிலுவை தொகை 1.1.2016 முதல் 30.9.2017 வரை 21 மாதங்களுக்கு அனுமதித்து, அதனை வழங்க வேண்டும். 70 வயதான ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.3 லட்சமாகவும், மருத்துவ படியை ரூ.300-ல் இருந்து, ரூ.ஆயிரமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக அரசு ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஊதியத்தை வழங்க வேண்டும். கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் தமிழை பயிற்று மொழியாக கொண்டு வந்து மாணவர்களுக்கு கல்வி கற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 12 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள பெரம்பலூர் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கும் திட்டத்தை தொடங்கிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக சங்கத்தின் தலைமை நிலைய செயலாளர் மணி வரவேற்றார். முடிவில் செல்லப்ப ரெட்டி நன்றி கூறினார்.