ஈசல்தட்டு மலைவாழ் குடியிருப்பில் காற்றில் பறந்த மேற்கூரை


ஈசல்தட்டு மலைவாழ் குடியிருப்பில் காற்றில் பறந்த மேற்கூரை
x

ஈசல்தட்டு மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் காற்றில் மேற்கூரை பறந்ததால் மக்கள் அவதி அடைந்தனர்.

திருப்பூர்

ஈசல்தட்டு மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் காற்றில் மேற்கூரை பறந்ததால் மக்கள் அவதி அடைந்தனர்.

மலைவாழ் மக்கள் குடியிருப்பு

உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள தளிஞ்சி, தளிஞ்சிவயல், ஆட்டுமலை, ஈசல்தட்டு, பொருப்பாறு, கோடந்தூர், குருமலை, மாவடப்பு, மஞ்சம்பட்டி, கீழானவயல், கருமுட்டி, பூச்சகொட்டாம்பாறை, குளிப்பட்டி, முள்ளுப்பட்டி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.

இவர்களுக்கு நிறைவேற்றி தரப்படாத அடிப்படை வசதிகளில் வீடும் அடங்கும். முறையாக வீடுகள் கட்டித்தரப்படாதால் மூங்கில் குச்சிகளை பயன்படுத்தி சுற்றுச்சுவர் எழுப்பி தகரத்தை மேற்கூரையாக கொண்டு வீடுகளை அமைத்து உள்ளனர். இதனால் கடும் வெயிலும், காற்றும் அடை மழையும் மலைவாழ் மக்களுக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகிறது.

பறந்த மேற்கூரை

அந்த வகையில் கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. அதன் தாக்குதலை சமாளிக்க முடியாமல் மலைவாழ் மக்களின் வீடுகள் ஆட்டம் கண்டு வருகிறது. இந்த சூழலில் நேற்று ஈசல்தட்டு வனப்பகுதியில் சூறைக்காற்று வீசியது. அதன் தாக்குதலில் வீட்டின் மேற்கூரை தூக்கி வீசப்பட்டது. இதனால் வீட்டில் குடியிருக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

இது குறித்து மலைவாழ்மக்கள் கூறுகையில், பாதுகாப்பான வாழ்வை மேற்கொள்வதற்கு அடிப்படை தேவையான வீடு அவசியமாகும். ஆனால் அடர்ந்த வனப்பகுதியில் வசித்து வருகிற எங்களுக்கு நிரந்தர வீடுகள் கட்டித்தரவில்லை. இதனால் மூங்கில் குச்சி மற்றும் தகரத்தை கொண்டு வீடுகளை எழுப்பி வசித்து வருகிறோம். அவை இயற்கை சீற்றங்களுக்கு பாதிப்பு அடைவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. நேற்று வீசிய பலத்த காற்றுக்கு ஈசல்தட்டு பகுதியில் ஒரு வீடு சேதமானது.

இதனால் அந்த வீட்டில் குடியிருக்க முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் அடர்ந்த வனப்பகுதியில் வசித்து வருகின்ற மலைவாழ் மக்களுக்கு மின்சார வசதியுடன் கூடிய கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் இது போன்று இல்லை. இதனால் எங்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. எனவே ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் கான்கிரீட் வீடுகள் கட்டித்தர அரசும், அதிகாரிகளும் முன்வர வேண்டும் என்றனர்.


Related Tags :
Next Story