தொழுநோய் பாதித்த நபர்களை சமமாக பார்க்க வேண்டும்
தொழுநோய் பாதித்த நபர்களை சமூகத்தில் சமமான நிலையில் பார்க்க வேண்டும் என்று வேலூரில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறினார்.
தொழுநோய் விழிப்புணர்வு முகாம்
வேலூர் டவுன் ஹாலில் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பானுமதி, குடும்ப நலத்துறை துணை இயக்குனர் மணிமேகலை, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை தோல் சிகிச்சைப்பிரிவு தலைவர் டாக்டர் வரதமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி 3 பயனாளிகளுக்கு ஊன்றுகோல், காலணிகளை வழங்கி பேசினார்.
அவர் பேசியதாவது:-
தொழுநோய் பாதித்த நபர்களையும் சமூகத்தில் சமமான நிலையில் பார்க்க வேண்டும். தொழுநோய் என்பது காற்றில் பரவக்கூடியது. இதற்கு காரணமாக மைக்ரோ பாக்டீரியா லெப்ரோ என்ற பாக்டீரியா நரம்பு மண்டலத்தின் நுனிப்பகுதியில் தொடங்கி நரம்பு மண்டலத்தை அதன் அமைப்பில் இருந்து இழக்க செய்கிறது. இதனால் பார்வை குறைபாடு கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
கிராமப்புற பகுதிகளில்...
தொழுநோய் பாதித்தவர்கள் ஆரம்ப நிலையிலேயே மருத்துவ சிகிச்சைகள் எடுத்து கொண்டால் இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து முற்றிலுமாக விடுபடலாம். நாம் வசிக்கும் பகுதிகளில் யாரேனும் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களை மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்து கொள்ளும்படி அறிவுறுத்த வேண்டும். தொழுநோய் பாதித்த நபர்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நாம் ஒவ்வொருவரும் சமூக கடமையாக எண்ணி செயலாற்ற வேண்டும். தொழுநோய் பாதிக்கப்பட்டவர்களை சமூகத்தில் வெளியே அழைத்து வந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ள அறிவுறுத்த வேண்டும். இதுபோன்ற விழிப்புணர்வு முகாம்கள் கிராமப்புற பகுதிகளிலும் விரிவுப்படுத்தப்படும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
முன்னதாக கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமையில் தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர் கலெக்டர், தொழுநோய் குறித்த விழிப்புணர்வு பலகையில் கையெழுத்து இட்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில், கரிகிரி மருத்துவமனை இயக்குனர் ஜென்சி ஜெஸ்லியா, வேலூர் தாசில்தார் செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.