ரெயில்வே தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்குவதால் மக்கள் பாதிப்பு


ரெயில்வே தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்குவதால் மக்கள் பாதிப்பு
x

புதுப்பேட்டை சாலையில் உள்ள ரெயில்வே தரைப்பாலத்தில் தேங்கும் தண்ணீரை அகற்றுவது குறித்து மோட்டார் சைக்கிளில் சென்று கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

புதுப்பேட்டை சாலையில் உள்ள ரெயில்வே தரைப்பாலத்தில் தேங்கும் தண்ணீரை அகற்றுவது குறித்து மோட்டார் சைக்கிளில் சென்று கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வு செய்தார்.

தரைப்பாலத்தில் தேங்கும் தண்ணீர்

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட புதுப்பேட்டை சாலையில் ரெயில்வே தரைப்பாலம் உள்து. இதன் வழியாக நாட்டறம்பள்ளி, புதுப்பேட்டை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தரைப்பாலத்தின் வழியாகத்தான் திருப்பத்தூருக்கு வந்து செல்ல வேண்டும்.

திருப்பத்தூர் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக தரைப்பாலத்தில் எப்போதும் தண்ணீர் தேங்கிக்கொண்டே இருக்கும். இதனால் அவ்வப்போது மோட்டார் பயன்படுத்தி தண்ணீரை வெளியேற்றி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் திருப்பத்தூர் பகுதியில் பெய்த பலத்த மழையால் ரெயில்வே தாரைப்பாலத்தில் தண்ணீர் தேங்கியது.

மோட்டார் சைக்கிளில் சென்று கலெக்டர் ஆய்வு

மேலும் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு, பள்ளிக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நிரந்தர தீர்வு காண வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து நேற்று மாலை கலெக்டர் அமர்குஷ்வாஹா தரைப்பாலத்தில் தடையின்றி தண்ணீர் செல்லவும், நிரந்தர தீர்வு காண்பதற்காகவும் அப்பகுதியில் ஆய்வு செய்தார்.

அப்போது அந்த இடங்களுக்கு கார் செல்ல முடியாததால் காரை நிறுத்திவிட்டு, மோட்டார் சைக்கிளில் சென்று அங்கு கால்வாய் ஏற்படுத்தினால் தண்ணீர் தடையின்றி செல்லுமா என ஆய்வு மேற்கொண்டார். மேலும் தண்ணீர் தடையின்றி செல்வதற்கு பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி, தாசில்தார் சிவப்பிரகாசம், நகராட்சி ஆணையர் ஜெயராமராஜா மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story